
குவாலா பிலா, மே 29 – நெகிரி செம்பிலான் குவாலா பிலா அருகே உள்ள கம்புங் தஞ்சுங் பச்சாங், ஸ்ரீ மெனாந்தி (Kampung Tanjung Bachang, Seri Menanti) பகுதியில் நேற்று இரவு ஒரு கார் கட்டுப்பாட்டை இழந்து மலை அடிவாரத்தில் இருந்த வீட்டின் கூரையில் பாய்ந்து விபத்துக்குள்ளானது.
இரவு சுமார் 7.30 மணியளவில் நடந்த இந்த சம்பவத்தில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என்று குவாலா பிலா மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரிண்தெண்டன் முகமட் முஸ்தபா ஹுசின் (Superintendan Muhamad Mustafah Hussin) தெரிவித்தார்.
63 வயதுடைய ஓட்டுநர், பேரோடுவா ஆக்சியா காரில் ஸ்ரீ மெனாந்தியிலிருந்து சிரம்பானுக்கு சென்று கொண்டிருந்தபோது, கட்டுப்பாட்டை இழந்து சாலையிலிருந்து விலகி வீட்டின் கூரையை மோதியதாக ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த விபத்தில் முன்புற மற்றும் பின்புற பயணிகள் லேசான காயமடைந்து குவாலா பிலா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஓட்டுநருக்கும் மற்றொரு பயணிக்கும் காயம் ஏற்படவில்லை.
இந்த வழக்கு சாலை போக்குவரத்து விதிமுறைகளின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது.



