
கூச்சிங், ஆகஸ்ட் 7 – கடந்த ஆகஸ்ட் 2-ஆம் தேதி, கூச்சிங் விழாவில் மூவரை காயப்படுத்திய “டாகாடா” கேளிக்கை சவாரிக்கு, செல்லுபடியாகும் உடற்தகுதி சான்றிதழ் (CF) இல்லை என்றும் தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறையில் (DOSH) பதிவு செய்யப்படவில்லை என்றும் DOSH உறுதிப்படுத்தியுள்ளது.
கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட கேளிக்கை பூங்கா சாதனங்களின் பாதுகாப்பு மேலாண்மை வழிகாட்டுதல்கள் படி, தளத்தில் அமைக்கப்படும் ஃபெர்ரிஸ் சக்கரம் போன்ற கேளிக்கை சவாரிகள் CF சான்றிதழைப் பெற்றிருப்பது கட்டாயமான ஒன்றாகும்.
இந்த விபத்தில், டாகாடா சவாரி சரிந்து விழுந்ததில் மூவர் சிறிதளவு காயமடைந்தனர் என்றும் முதலுதவி குழுவினர் உடனடி சிகிச்சை வழங்கினர் என்றும் அறியப்படுகின்றது.
மேலும், இந்தச் சவாரிகளைப் பதிவு செய்யத் தவறுவது, தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார விதிமுறைகளின்படி பெரும் குற்றம் என்பதை DOSH விளக்கியுள்ளது.
சம்பந்தப்பட்ட முதலாளிக்கு 3 தடை அறிவிப்புகள் வழங்கப்பட்டுள்ளன என்றும் இந்த வழக்கு, தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரச் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகின்றது என்றும் அறியப்படுகின்றது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், சந்தேக நபர்களுக்கு அதிகபட்சமாக 500,000 ரிங்கிட் வரையிலான அபராதம் விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.