
கூலாய், பிப்ரவரி-26-ஜோகூர், கூலாயில் உள்ள செங்காங் இரப்பர் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தின் பாதிப்பாக, அருகிலுள்ள 2 பள்ளிகளைச் சேர்ந்த 80 மாணவர்களுக்கு உடலில் இலேசான அறிகுறிகள் தென்பட்டுள்ளன.
தலைவலி, இருமல், கண் எரிச்சல், இலேசான மூச்சுத் திணறல் போன்றவை அவற்றில் அடங்கும் என, சுகாதாரம் மற்றும் சுற்றுச் சூழல் துறைகளுக்கான மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் Ling Tian Soon தெரிவித்தார்.
எனினும், எந்த மாணவரும் மருத்துவமனையில் தங்க வைக்கப்படவில்லை என்றார் அவர்.
தொழிற்சாலை தீயால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் காற்றின் தரம் வழக்கான நிலையிலேயே கட்டுப்பாட்டுக்குள் பதிவாகியுள்ளன.
என்ற போதிலும் ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று மேலும் 3 பள்ளிகள் மூடப்பட்டதாக அவர் சொன்னார்.
SK Taman Kota Kulai, SK Taman Kota Kulai 2, Taman Kota Kulai சமயப் பள்ளி ஆகியவையே அப்பள்ளிகளாகும்.
இதையடுத்து இதுவரை மொத்தமாக 5 பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.
செவ்வாக் கிழமை ஏற்பட்ட அத்தீ விபத்தை அணைக்கும் பணிகள் மூன்றாவது நாளாகத் தொடருகின்றன;
இதுவரை 90 விழுக்காட்டு தீ அணைக்கப்பட்டுள்ளது.
தீயின் கரும்புகை சுகாதார கேட்டை விளைவிக்கலாம் என்பதால், அன்றைய தினமே செங்காங் சீனப் பள்ளி, கூலாய் பெசார் சீனப் பள்ளி ஆகியவை மூடப்பட்டன.
மூடப்பட்ட பள்ளிகள் அனைத்தும் வீட்டிலிருந்தே கற்றல் – கற்பித்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநிலக் கல்வி இலாகா உத்தரவிட்டுள்ளது.



