
கூலிம், ஏப்ரல்-28, கெடா, கூலிம், தாமான் கோத்தா கெனாரியில் தனது கழுத்துச் சங்கிலியைப் பறிக்க முயன்ற ஆடவனைத் தடுக்க முயன்ற பெண், முழங்கால்கள், கை, மற்றும் கன்னத்தில் காயமடைந்தார்.
சனிக்கிழமை மாலை 5 மணிக்கு அச்சம்பம் நிகழ்ந்ததாக, கூலிம் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிடென்டண்ட் சுல்கிஃப்ளி அசிசான் கூறினார்.
சம்பவத்தின் போது, 39 வயது அப்பெண், தனது தாயார் மற்றும் தோழியுடன் சமையல் கட்டில் இருந்தார்; அப்போது 2 மர்ம நபர்கள் மோட்டர் சைக்கிளில் வந்திறங்கினர்.
அவர்களில் ஒருவன் கத்தியுடன் வீட்டுக்குள் நுழைந்து, பாதிக்கப்பட்ட பெண்ணின் தோழி அணிந்திருந்த நகையைப் பறிக்க முயன்றான்.
எனினும், அப்பெண் மல்லுக் கட்டியதால், அவனது அம்முயற்சி தோல்வியடைந்தது.
அடுத்து, பாதிக்கப்பட்ட பெண்ணின் கழுத்திலிருந்த சங்கிலியை சட்டென அவன் பிடித்து இழுக்க, அறுந்துபோனது.
அவரின் கூந்தலையும் அவன் பிடித்து இழுத்ததால் அப்பெண் கீழே விழுந்தார்.
இதனால், இரு முழங்கால்களிலும், இடது கன்னத்திலும், வலது கையிலும் அவர் காயமடைந்தார்.
கொள்ளையன்கள் இருவரும் பின்னர் தப்பியோடினர்.
எனினும், விலையுயர்ந்த பொருள் எதுவும் திருடு போகவில்லை.
வீட்டின் வெளியே இருந்த CCTV கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாதிக்கப்பட பெண் கூலிம் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றார்.