
கோலாலம்பூர், ஜனவரி 26 – கெசாஸ் நெடுஞ்சாலை பூச்சோங் வெளியேறும் பாதையில் இரண்டு லாரிகள் அதிவேகமாக பயணித்ததோடு மட்டுமல்லாமல் ஒன்றோடு ஒன்று போட்டியிட்டு பந்தயம் ஓடும் காட்சி சமூக ஊடகங்களில் வைரலாகி, சாலைப் பயணிகளிடையே பெரும் அச்சத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
டாஷ்கேம் மூலம் பதிவு செய்யப்பட்ட அந்த வீடியோவில், வெளியேறும் பாதையில் மிக வேகமாக சென்ற லாரிகள், நெடுஞ்சாலையில் பயணித்த மற்றொரு காரை மோதும் நிலைக்கு மிக அருகில் வந்ததைத் தெளிவாகக் காண முடிந்தது.
சம்பவம் தொடர்பாக சமூக ஊடகங்களில் பலர் தங்களின் கவலையை வெளிப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் லாரி ஓட்டுநர்கள் போக்குவரத்து விதிகளை மதிக்காமல் பாதையை திடீரென மாற்றி ஆபத்தாக ஓட்டுவது அடிக்கடி நடந்து வரும் ஒன்று என்று வலைதளவாசிகளில் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் போலீசார் சம்பந்தப்பட்டவர்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் சமூக ஊடக பயனர்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
இதுபோன்ற ஆபத்தான சம்பவங்கள் தற்போதைய காலகட்டத்தில் அன்றாட நிகழ்வாக மாறிவிட்டதால் கவனக்குறைவாக வாகனம் ஓட்டும் லாரி ஓட்டுநர்களுக்கு எந்தவித பாரபட்சமுமின்றி கடுமையான தண்டனைகள் விதிக்கப்பட வேண்டும்.



