கிழிந்த கடப்பிதழுக்காக RM200 கேட்ட ஜோகூர் குடிநுழைவு அதிகாரி; சிங்கப்பூர் பெண் புகார்

ஜோகூர் பாரு, மார்ச் 5 – ஜோகூர் பாலத்தில் மலேசியாவிற்குள் நுழைய முயன்றபோது கிழிந்த கடப்பிதழுக்கு அபராதமாக 200 ரிங்கிட் செலுத்தும்படி மலேசிய குடிநுழைவு அதிகாரி ஒருவர் தம்மிடம் கேட்டதாக சிங்கப்பூர் பெண் ஒருவர் கூறியிருப்பது குறித்து புகார் செய்யும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்.
Bangunan Sultan Iskandar கட்டிட வளாகத்திலுள்ள சுங்க, குடிநுழைவு மற்றும் தனிமைப்படுத்தும் வளாகத்தில் உள்ள மலேசிய குடிநுழைவு அதிகாரி தனது கடப்பிதழ் சேதம் அடைந்தபோதிலும் மலேசியாவிற்குள் நுழைவதற்கு 200 ரிங்கிட் கட்டணம் கோரியதாக 72 வயதுடைய அந்த பெண்மணி குற்றஞ்சாட்டினார்.
அந்த பெண் இதுகுறித்து குடிநுழைவுத்துறை மற்றும் போலீசில் புகார் செய்யவில்லை என தெரியவந்துள்ளது.
பிப்ரவரி 23 ஆம் தேதியன்று ஜோகூர்பாருவில் உள்ள CIQ சோதனைச் சாவடி வழியாக சீனப் புத்தாண்டு கூட்டத்திற்குச் செல்லும் வழியில் நண்பர்களுடன் பயணம் செய்தபோது இந்த பிரச்னைக்கு உள்ளானதாக தம்மை லீ என்று அடையாளம் கூறிக்கொண்ட அந்த பெண் சிங்கப்பூரின் சீன செய்தி இணையத் தளமான Lianhe Zaobao விடம் தெரிவித்தார்.
காலை 11 மணிக்கு குடிநுழைவு முகப்பிடத்திற்கு வந்த அவர்கள், வாகனத்திலிருந்து இறங்காமல் தங்கள் கடப்பிதழ்களை அதிகாரியிடம் ஒப்படைத்ததாகவும் பல கடப்பிதழ்களை பரிசீலித்த பிறகு , அந்த அதிகாரி தனது கடப்பிதழ் பக்கங்கள் கிழிந்திருப்பதாகக் கூறி, சிக்கலை ‘சரிசெய்ய 200 ரிங்கிட் செலுத்துமாறு கோரியதாகக் கூறப்படுகிறது.
தன்னிடம் 50 ரிங்கிட் மட்டுமே இருப்பதாகக் கூறி, அதிகாரியுடன் பேச்சு நடத்த அந்த பெண் முயன்றார்.
பின்னர் அதிகாரி ஓட்டுநரிடம், மலேசியாவிற்குள் அனுமதிக்கப்படுவதற்கு முன்பு லி குறைந்தபட்சம் 100 ரிங்கிட் செலுத்த வேண்டும் என்று கூறியதாக தெரிகிறது. அந்த தொகையை செலுத்திய பிறகே தாம் மலேசியாவிற்குள் செல்ல அனுமதிக்கப்பட்டதாக அப்பெண் கூறினார்.