
ஜோர்ஜ்டவுன், ஆகஸ்ட்-10 – கெடா ம.இ.காவைப் பின்பற்றி தற்போது பினாங்கு ம.இ.காவும் தேசிய முன்னணியிலிருந்து விலக பரிசீலித்து வருகிறது.
மாநில ம.இ.காவின் 79-வது பேராளர் மாநாட்டில் அது முடிவானதாக, மாநில ம.இ.கா தொடர்புக் குழுத் தலைவர் ஜெ. தினகரன் கூறியுள்ளார்.
தொகுதி மற்றும் கிளைத் தலைவர்களின் விருப்பம் அதுவெனக் கூறிய தினகரன், இறுதி முடிவை தேசியத் தலைவர் மற்றும் மத்திய செயலவையிடம் விட்டு விடுவதாக தெரிவித்துள்ளார்.
கூட்டணி தர்மத்தை மீறி அனைத்தையும் அம்னோவே அனுபவிக்கிறது; தேர்தலில் சீட்டு, அரசாங்க தொடர்புடைய நிறுவனங்கள் மற்றும் ஊராட்சி மன்ற பதவிகள் என ஒன்று விடாமல் அனைத்தையும் அம்னோவே எடுத்துக் கொண்டால், எங்களுக்கு அங்கு என்ன வேலை என தினகரன் கேள்வி எழுப்பினார்.
ம.இ.கா இல்லாமல் 16-ஆவது பொதுத் தேர்தலை தேசிய முன்னணி சந்திப்பதொன்றும் எளிதான காரியம் அல்ல; அதற்காக நாங்கள் மிரட்டவில்லை, நடைமுறை உண்மையை சொல்கிறோம்” என்றார் அவர்.
முன்னதாக, தேசிய முன்னணியிலிருந்து விலகி பெரிக்காத்தான் நேஷனலுடன் ஒத்துழைக்க வலியுறுத்தி, கெடா ம.இ.கா தீர்மானம் நிறைவேற்றியது.
தனது எதிர்காலம் கருதி யாருடனும் பேச ம.இகா தயாராக இருப்பதாக தேசியத் தலைவர் தான் ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.