
கோலாலம்பூர், ஜூலை-22- கோலாலாம்பூர், கெப்போங்கில், போலி ஆவணங்களைத் தயாரிக்கும் மையமாக செயல்பட்டு வந்த குடியிருப்பை குடிநுழைவுத் துறை முற்றுகையிட்டதில், நூற்றுக்கணக்கான போலிக் கடப்பிதழ்கள் கைப்பற்றப்பட்டன.
இன்று அதிகாலை ஒன்பதாவது மாடியில் உள்ள வீட்டில் அந்த Ops Serkap சோதனை மேற்கொள்ளப்பட்ட போது, 20 வயது மதிக்கத்தக்க இரு வங்காளதேச ஆடவர்கள் போலிக் கடப்பிதழ்களைத் தயாரித்துக் கொண்டிருந்தனர்.
வங்காளதேசம், இந்தியா, நேப்பாளம், இந்தோனேசியா, பாகிஸ்தான், மியன்மார் போன்ற நாடுகளின் போலிக் கடப்பிதழ்கள் அங்குத் தயாரிக்கப்பட்டது தெரியவந்தது.
400 ரிங்கிட் கட்டணத்தில் ஒரு கடப்பிதழை ‘express’ வேகத்துக்கு 25 முதல் 30 நிமிடங்களில் அவர்கள் தயாரித்துக் கொடுக்கின்றனர்.
வரும் ஆர்டர்களைப் பொருத்து ஒருநாளைக்கு 20 முதல் 30 போலிக் கடப்பிதழ்கள் வரை தயாரிக்கப்படுகிறது.
இது தவிர, மலேசியாவில் வேலை செய்யும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்குத் தேவைப்படும் மருத்துவ பரிசோதனை மற்றும் கண்காணிப்பு ஆவணங்களும் அங்கு கைப்பற்றப்பட்டன.
போலிக் கடப்பிதழ்களுக்கான விண்ணப்பங்கள் வாட்சப் வாயிலாக வாடிக்கையாளர் மற்றும் முகவர்களுக்கு இடையில் மேற்கொள்ள்பபடுகிறது.
கட்டணம், வங்காளதேசத்தைத் தளமாகக் கொண்ட ஒரு நபரின் வங்கிக் கணக்குக்குப் போடப்படுகிறது. கைதான சந்தே நபர்கள் குடிநுழைவுச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.