தொடங்கியது மகா கும்பமேளா: முதல் நாளிலேயே ஒன்றரை கோடி பேர் புனித நீராடல்

உத்தர பிரதேசம், டிசம்பர்-29 – உலகின் மிகப் பெரிய ஆன்மீக சங்கமமான மகா கும்பமேளா, இந்தியா, உத்தர பிரதேச மாநிலத்தின் பிரயாக்ராஜ் நகரில் கோலாகலமாகத் தொடங்கியுள்ளது.
முதல் நாளான நேற்று மட்டுமே சுமார் ஒன்றரை கோடி பக்தர்கள் புனித நீராடியதாக, மாநில அரசு கூறியது.
கடும் குளிரும் அடர் பனிமூட்டமும் நிலவினாலும், அவற்றைப் பொருட்படுத்தாமல் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடல் நடைபெற்றது.
பக்தி பரவசத்துடன் ‘ஜெய் ஸ்ரீ ராம்’ ‘ஹர ஹர மகாதேவ்’ ‘ஜெய் கங்கா மாதா’ முழக்கங்கள் மகா கும்ப நகரில் எல்லா திசைகளிலும் எதிரொலித்தன.
விண்வெளியில் இருந்து பார்த்தாலும் கூட தெரியக் கூடிய அளவுக்கு, உலக வரலாற்றில் மிகப் பெரும் ஒன்றுகூடலாகக் கருதப்படும் இந்த மகா கும்பமேளாவில், அமெரிக்கா, ரஷ்யா மற்றும் ஐரோப்பா உட்பட உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து இந்து மதத்தைப் பின்பற்றுவோரும் சுற்றுப் பயணிகளும் குவிந்துள்ளனர்.
மகா சிவராத்தி திருநாளான பிப்ரவரி 26-ஆம் தேதி வரை 45 நாட்களுக்கு நடைபெறும் கும்ப மேளாவில், சுமார் 400 மில்லியன் பக்தர்கள், ஒரே இடத்தில் கூடவிருக்கின்றனர்.
கங்கை, யமுனா, சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் இடத்தில் புனித நீராடுவதன் மூலம் பாவங்களில் இருந்து தங்களுக்கு விடுதலை கிடைத்து ‘மோட்சம்’ அடைந்து, பிறப்பு இறப்பு ஆகிய சுழற்சிகளிலிருந்து விடுதலை கிடைக்குமென்றும் இந்துக்கள் நம்புகின்றனர்.
இதற்காக, இந்தியா மற்றும் உலகெங்கிலும் இருந்து வரும் பக்தர்கள் தங்குவதற்காக பெரிய அளவில் கூடார நகரமே உருவாக்கப்படுள்ளது.