
ரெமடியோஸ், ஜூலை-19- வடமேற்கு கொலம்பியாவில் தங்கச் சுரங்கத்தில் ஏற்பட்ட கடுமையானதொரு விபத்தில் உள்ளேயே சிக்கிக் கொண்ட 18 சுரங்கத் தொழிலாளர்களும், 18 மணி நேரங்களுக்குப் பிறகு பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
அந்நாட்டு சுரங்க மற்றும் எரிசக்தி அமைச்சர் அதனை உறுதிப்படுத்தினார்.
மீட்கப்பட்ட தொழிலாளர்கள் சோர்வுடன் காணப்பட்டாலும், ஆரோக்கியமாக இருப்பதாக அவர் சொன்னார்.
விபத்து ஏற்பட்டதற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை.
என்றாலும், சுரங்கத்தினுள் நிலச்சரிவுகளைத் தடுப்பதற்காக அமைக்கப்பட்ட கட்டுமானம் திடீரென சரிந்து, சுரங்கத்திலிருந்து வெளியேறும் முதன்மைப் பாதையை மறைத்துக் கொண்டதே அச்சம்பவத்துக்குக் காரணம் என, உள்ளூர் சுரங்க சங்கம் கூறியது.
சட்டவிரோத சுரங்கத் தொழில் நடைபெறும் சம்பவ இடமான ஆன்டியோகுவா (Antioquia), காலங்காலமாகவே சுரங்கத் தொழிலுக்குப் பெயர்பெற்றதாகும்.
அங்கு தோண்டியெடுக்கப்படும் தங்கங்கள், கொக்கேய்ன் போதைப்பொருள் கடத்தலை மேற்கொண்டு வரும் ஆயுதமேந்திய கும்பலுக்கு நிதியளிக்கவும் பயன்படுத்தப்படுவதாக நம்பப்படுகிறது.