
ஜோகூர் பாரு, ஜூலை 29 – 6 வயது சிறுவன் ஒருவன் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட உடல் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்நிலையில், ஶ்ரீ அலாமில் அச்சிறுவனின் அண்டை வீட்டுக்காரரான 47 வயது கமாருடின் அப்துல்லா என்பவர் சில அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டிருக்கிறார்.
இந்த குடும்பம் கடந்த 1 வருட காலமாகத்தான் இந்த குடியிறுப்புப் பகுதில் வாழ்ந்து வருகின்றனர். இறந்த சிறுவனின் வீட்டில் அடிக்கடி சண்டை நடக்கும், அதைத் தொடர்ந்து, அச்சிறுவனின் அழுகுரல் கேட்கும். அவர்களது வீட்டுச் சண்டை சத்தம் சுற்றிலிருக்கும் அனைத்து வீடுகள் வரை கேட்கும் என்றே சொல்லலாம்.
அச்சிறுவனின் குடும்பம் யாரிடமும் அதிகம் பழக மாட்டார்கள். அவசியம் இருப்பின் தவிர மற்றபடி அச்சிறுவனின் தந்தை, அக்கம் பக்கத்தில் இருப்பவர்களிடம் பேச மாட்டார்.
அவர்களை வெளியே அடிக்கடி பார்க்கவும் முடியாது.
அப்படி பார்த்தால் தனித்தனியாக தவிர ஒன்றாக அல்ல. அச்சிறுவனை பார்த்தே சில வாரங்கள் ஆகிவிட்டன என கூறியுள்ளார் அவர். இதனிடையே, மகன் காணாமல் போய்விட்டதாக கூறி புகார் செய்யப்பட்ட நிலையில், அச்சிறுவனின் கொடூரமாக கொலை செய்யப்பட்ட உடல் நேற்று கண்டெடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, விசாரணைக்காக அச்சிறுவனின் தந்தை 7 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளான்.