
ஜோகூர் பாரு, டிசம்பர் 3 – ஜோகூர் பாரு UTM பல்கலைக்கழகத்தின் PALAPES உறுப்பினரான Syamsul Haris Shamsudin-இன் மரணம், கொலை வழக்காகப் வகைப்படுத்தப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, மலேசிய தொழில்நுட்ப பல்கலைக்கழகமான UTM, விசாரணைக்கு முழு ஒத்துழைப்பை வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
இவ்வழக்கில் எந்த நபர் தொடர்புடையவராக இருந்தாலும், அவர்களை தாங்கள் பாதுகாக்கப்போவதில்லை என்றும், வெளிப்படைத்தன்மை மற்றும் சட்டத்தின் ஆட்சியை மதிக்கும் கொள்கையின் பேரில் அனைத்து விசாரணைகளும் தடையின்றி நடைபெற அனுமதிப்போம் என்றும் பல்கலைக்கழகம் உறுதியளித்துள்ளது.
அதே நேரத்தில் இச்சம்பவம் தொடர்பான பொய்யான மற்றும் உறுதி செய்யப்படாத தகவல்களைப் பரப்ப வேண்டாமென்றும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
நேற்று, போலீசார் மேற்கொண்ட விசாரணை அறிக்கையின் அடிப்படையில், தேசிய சட்டத்துறை இம்மரணத்தை மீண்டும் கொலை வழக்காக வகைப்படுத்த உத்தரவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஜூலை மாதம் உலு திராம் பயிற்சி மையத்தில் பயிற்சியை முடித்த பின்னர், Syamsul Haris உடல்நலக்குறைவாகி மருத்துவமனையில் உயிரிழந்தார்.
மறுநாள் அடக்கம் செய்த அவரது உடலை, மீண்டும் தோண்டி எடுத்து,மருத்துவமனை இரண்டாவது முறையாக பிரேத பரிசோதனையை மேற்கொண்டது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
இந்நிலையில் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்ட UTM, நீதி நிலை நிச்சயம் நாட்டப்படும் என்ற நம்பிக்கையையும் அவர்களுக்கு தெரிவித்துள்ளது.



