
கோலாலம்பூர், மார்ச்-23 – ஜாலான் மஸ்ஜித் இந்தியா தேவி ஸ்ரீ பத்ர காளியம்மன் ஆலய விவகாரத்தில் அப்போதைய DBKL நிர்வாகம் செயல்பட்ட விதம் குறித்து, ம.இ.கா தேசியத் தலைவர் தான் ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
சர்ச்சைக்குள்ளாயிருக்கும் நிலத்தில் கோயில் அமைந்துள்ளது தெரிந்திருந்தும் DBKL அதனை விற்றிக்கிறது.
கோயிலை இடமாற்றுவது உள்ளிட்ட விவகாரத்தைத் தீர்த்த பிறகல்லவா நிலத்தை விற்பது பற்றி DBKL யோசித்திருக்க வேண்டும்?
அதே சமயம் கோயில் இருப்பது தெரிந்து தான் Jakel குழுமமும் அந்நிலத்தை வாங்கியுள்ளது.
ஆக நிலத்தை விற்றவருக்கும் வாங்கியவருக்கும் கோயில் அங்கிருப்பது தெரியாமலில்லை.
இப்போது அங்கு மசூதி கட்டப்படவிருப்பதெல்லாம் ஒரு பிரச்னையல்ல; என் கேள்வியெல்லாம் கோயிலுக்கு ஒரு தீர்வைக் காணாமல் அவசர அவசரமாக நிலம் விற்கப்பட்டதும் வாங்கப்பட்டதும் ஏன் என்பது தான் புரியாத புதிராக உள்ளதாக விக்னேஸ்வரன் கூறினார்.
அக்கோயில் நில விவகாரம் குறித்து சில உண்மைகளைத் தெளிவுப்படுத்தும் நோக்கில் இன்று காலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தான் ஸ்ரீ விக்கி அவ்வாறு கேட்டார்.
கோயில் தனியார் நிலத்தில் சட்டவிரோதமாகக் கட்டப்பட்டிருப்பதாக பரலாகப் பேசப்படுவதை மறுக்கும் வகையில் அந்த செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.