
கோலாலம்பூர், ஜனவரி-21-ஓர் இந்து கோவிலைப் பற்றி சினமூட்டும் பதிவுகளை வெளியிட்டதாகக் கூறப்படும் சயேட்சை மதபோதகர் ஃபிர்டாவுஸ் வோங் (Firdaus Wong), ‘Cikgu Chandra’ எனப்படும் டிக் டோக் பயனர் ஆகிய இருவரும் கைதுச் செய்யப்பட வேண்டும் என, ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் RSN ராயர் கோரிக்கை விடுத்துள்ளார்.
அண்மையில் சர்ச்சைக்குரிய கருத்துகளுக்காக ஒரு பத்திரிகையாளருக்கு எதிராக விரைவாக நடவடிக்கை எடுக்கப்பட்டதை போல, சட்டம் அனைவருக்கும் சமமாகப் பயன்படுத்தப்பட வேண்டும் என ராயர் கூறினார்.
மாமன்னர் சுல்தான் இப்ராஹிம், நேற்று முன்தினம் தான் மலேசியர்கள் இன, மத கலகத்தைத் தூண்டாமல் ஒற்றுமையை பேண வேண்டும் என்று நினைவூட்டியதை அவர் சுட்டிக்காட்டினார்.
ஒரு மதத்தை சினமூட்டும் இத்தகையப் பதிவுகளை கவனிக்காமல் விட்டு விட்டால், அது சமூக அமைதியை பாதிக்கும் அபாயம் உண்டு எனவும் ராயர் எச்சரித்தார்.
ஃபிர்டாவுஸ் வோங் தனது ஃபேஸ்புக் பதிவில், “ஓர் இந்து கோவிலின் நிலத்தில் சட்டவிரோதமாக TNB கோபுரம் அமைக்கப்பட்டதா?” அப்படியென்றால், நிலத்தில் அத்துமீறிய நிறுவனத்திற்கு எதிராக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கிண்டலடிக்கும் தோரணையில் கேள்வி எழுப்பினார்.
Cikgu Chandra-வோ, இரண்டில் எது முதலில் வந்தது எனக் கேட்டு பதிவிட்டிருந்தார்.
சமூகத்தில் பதற்றத்தை ஏற்படுத்தும் முன்னர், அவ்விருப் பதிவுகளையும் நீக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ராயர் வலியுறுத்தினார்.



