
பாசிர் கூடாங், மார்ச்-23 – ஜாலான் மஸ்ஜி இந்தியா ஆலய விவகாரம் சுமூகமாகத் தீர்க்கப்பட, பி.கே.ஆர். கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் 2 பரிந்துரைகளை முன்வைத்துள்ளார்.
ஒன்று, எக்காரணம் கொண்டும் தேவி ஸ்ரீ பத்ர காளியம்மன் ஆலயம் உடைக்கப்படக் கூடாது என பாசீர் கூடாங் எம்.பி ஹசான் அப்துல் காரிம், பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கு எழுதிய திறந்த மடலில் கூறினார்.
இந்நாட்டில் இந்துக்கள் தங்கள் சமய நம்பிக்கைகளையும் நடவடிக்கைகளையும் சட்டத்திற்குட்பட்டு மேற்கொள்ள உரிமை உள்ளது; அதனை மதிக்கும் வகையில் கோயில் உடைக்கப்படக் கூடாது.
இஸ்லாத்தை தேசிய மதமாக அவர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர்; அவர்கள் கேட்பதெல்லாம், யாருக்கும் எந்த தொந்தரவுமின்றி தங்கள் சமய நடவடிக்கைகளை அமைதியாக மேற்கொள்ள வேண்டும் என்பது தான் என ஹசான் சுட்டிக் காட்டினர்.
இன்னொன்று, உத்தேச மசூதிக் கட்டுமானத்தை அதே நிலத்தில் வேறோர் இடத்தில் கட்டலாம்; அதாவது கோயிலுக்கு அருகிலேயே மசூதியை நிர்மாணிக்கலாம்; இதன் மூலம் கோயிலும் உடைப்படாது, மசூதியும் கட்டப்படும்.
இப்பரிந்துரைகள் மட்டும் செயல்வடிவம் கண்டால் பல்வேறு நன்மைகளை நாம் பெற முடியும்.
எந்தவொரு மதத்தாரின் உணர்வுகளும் புண்படாது; இன – மத பிரிவினைகளையும் தவிர்க்க முடியும்.
இவற்றுக்கெல்லாம் மேலாக, இந்த புனித இரமலான் மாதத்தில் அனைத்து மலேசியர்களுக்குமான பிரதமர் என்ற தனது நன்மதிப்பை டத்தோ ஸ்ரீ அன்வார் உயர்த்திக் கொள்ளவும் வாய்பேற்படுமென ஹசான் கூறினார்.