
கோலாலம்பூர், ஜன 29 – கோலாலம்பூரிலுள்ள அழகு நிலையங்கள் மற்றும் SPA மையங்களில் சட்டவிரோத நடவடிக்கைகள் ஈடுபட்டு வருவதாக இரண்டு வார காலம் உளவு தகவல்கள் திரட்டப்பட்டதை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் 19 வெளிநாட்டுப் பெண்களை குடிநுழைவுத்துறை கைது செய்தது.
கோலாலம்பூர் மாநகரில் மூன்று இடங்களிலும் பூச்சோங்கில் ஒரு இடத்திலும் ஜனவரி 27 ஆம் தேதி இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது. கைது செய்யப்பட்டவர்களில் 12 பிலிப்பினோக்கள், ஆறு வியட்னாம் மற்றும் மாணவர் பாஸ் அட்டையைக் கொண்டிருந்த மங்கோலிய பெண்ணும் அடங்குவர்.
இவர்களில் அனைத்து பிலிப்பைன்ஸ் பெண்களும் உள்நாட்டு வீட்டு உதவியாளர்களுக்கான பாஸ்களை கொண்டிருந்தனர். எஞ்சியோர் முறையான அடையாள ஆவணங்களை கொண்டிருக்கவில்லை.
அவர்களிடமிருந்து கடப்பிதழ்கள், ஐந்து கை தொலைபேசிகள் 1,500 ரிங்கிட் ரொக்கத் தொகையும் பறிமுதல் செய்யப்பட்டதாக குடிநுழைவு துறையின் தலைமை இயக்குநர் டத்தோ ஷக்காரியா வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.



