
கோலாலம்பூர், செப்டம்பர்- 25,
கோலாலம்பூர் ஊராட்சி மன்ற சுகாதார அதிகாரிகள் (DBKL), சுத்தம் கடைப்பிடிக்காததால் தாமான் கெம்பிரா, ஜாலான் பெரிசா 1-இல் உள்ள ஒரு உணவகத்தை மூடுவதற்கு நேற்று உத்தரவு பிறப்பித்தினர்.
அந்த உணவகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், சாக்கடை குழி முழுவதும் கொழுப்பு மற்றும் எண்ணெய் கழிவுகள் நிரம்பியிருந்ததுடன், பல கடுமையான சுகாதார குறைகள் கண்டறியப்பட்டன.
இவை பொதுமக்கள் ஆரோக்கியத்திற்கு ஆபத்தானவை என்பதால் அந்த உணவகத்திற்கு மூடல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதுடன், அபராதமும் விதிக்கப்பட்டது.
மேலும், பல உணவு வணிக இடங்களில் செல்லுபடியாகும் உரிமம் இன்றி செயல்பட்டன எனவும் எண்ணெய் பிடிக்கும் கருவிகள் சரிவர பராமரிக்கப்படவில்லை என்றும் மேலும் கழிவு எண்ணெய் நேரடியாக பொதுக் கழிவுநீரில் விடப்பட்டது என்றும் குற்றம் சாட்டப்பட்டது.
இன்னும் சில உணவு விற்பனையாளர்கள் சுத்தம் தொடர்பான விதிகளை பின்பற்றவில்லை என்றும் தலைக்கவசம் அணியாமல் சமையல் வேளைகளில் ஈடுபட்டு வந்தனர் என்றும் அறியப்படுகின்றது.
இந்நிலையில் கோலாலம்பூரில் உள்ள உணவகங்கள் எப்போதும் சுத்தமாக இருப்பதை உறுதி செய்வதற்கு தொடர்ந்து ஆய்வுகள் நடைபெறும் என்றும் DBKL தெரிவித்துள்ளது.