கோலாலம்பூர், டிச 16 – தற்செயலாக டின்னுக்குள் தலை சிக்கிக்கொண்டு தவித்த பூனையை வெற்றிகரமாக மீட்ட தீயணைப்பு வீரர்கள் மற்றும் சிக்கலான நிலைமையை சமாளிப்பதில் விவேகமான செயல்பட்ட அப்பூனையின் உரிமையாளரான Ella என்ற பெண்ணிற்கு நெட்டிசன்கள் தங்களது பாராட்டுக்களை தெரிவித்துக் கொண்டனர். வெள்ளிக்கிழமை மாலை ஆறு மணியளவில் டின்னில் தலை சிக்கிக்கொண்ட நிலையில் தவித்துக் கொண்டிருந்த தனது Adik என்ற செல்லப் பூனையை கூண்டில் அடைந்துக்கொண்டு தனது வீட்டிற்கு அருகில் உள்ள தீயணைப்பு நிலையத்திற்கு Ella எடுத்துச் சென்று தீயணைப்பு வீரர்களிடம் நிலைமையை எடுத்துக்கூறி உதவிக் கோரியுள்ளார். தொடக்கத்தில் தீயணைப்பு வீரர் ஒருவர் அந்த பூனையை கூண்டிலிருந்து வெளியேற்றாமலேயே டின்னிலிருந்து அதனை விடுவிக்க முயன்றார்.
ஆனால் பயந்துபோன பூனை தனது கூர்மையான நகங்களால் அவரது பணியை மிகவும் சவாலாக மாற்றியது. தீவிர முயற்சிக்குப் பின் தீயணைப்பு வீரர்கள் வெற்றிகரமாக பூனையின் தலையை டின்னிலிருந்து விடுவித்தனர். இதனைத் தொடர்ந்து பூனையின் உரிமையாளரான Ella டிக்டோக் இடுகையில் தீயணைப்பு வீரர்களுக்கு தனது நன்றியை தெரிவித்தார். இந்த காணொளி வைரலானதோடு 77,000 லைக்குகளை பெற்றதோடு 3,000த்திற்கும் மேற்பட்டோர் தங்களது கருத்துக்களையும் பகிர்ந்தனர்.