
கோலாலம்பூரில் பேருந்து பாதையில் தினமும் 1,300 வாகனங்கள் பிடிபடுகின்றன; AI கேமராவில் அம்பலம்
கோலாலம்பூர், பிப்ரவரி-7,
கோலாலம்பூர் மற்றும் கிள்ளான் பள்ளத்தாக்கில் தினமும் 1,300-க்கும் மேற்பட்ட வாகனமோட்டிகள் பேருந்து பாதையில் நுழைவது அம்பலமாகியுள்ளது.
Rapid KL பேருந்துகளில் பொருத்தப்பட்ட AI கேமரா மற்றும் வாகனப் பதிவு எண் பட்டையை தானியங்கி முறையில் அடையாளம் காணும் தொழில்நுட்பம் மூலம் இந்த விதிமீறல்கள் கண்டறியப்படுகின்றன.
இந்த முன்னோடித் திட்டம் 2025 அக்டோபர் மாதம் தொடங்கி, ஜாலான் அம்பாங், ஜாலான் கெந்திங் கிள்ளான், பழையக் கிள்ளான் சாலை ஆகியப் பகுதிகளில் நடைமுறையில் உள்ளது.
வரும் மார்ச் வரை இந்தத் தண்காணிப்பு தொடரும்.
இது தற்போது சோதனை மற்றும் விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே செயல்படுத்தப்படுகிறது; சட்ட அமுலாக்கம் இன்னும் தொடங்கவில்லை.
இந்நிலையில் அடுத்த கட்டமாக, 50 பேருந்துகளில் AI கேமராக்கள் பொருத்தப்படவுள்ளன.
அதே சமயம், ஜாலான் கோம்பாக், ஜாலான் ஈப்போ, ஜாலான் செராஸ் பகுதிகளில் புதிய பேருந்து பாதைகள் 2027-க்குள் உருவாக்கப்படும்.
ஓரிரு ஆண்டுகளில் சட்டங்கள் திருத்தப்பட்டதும், இப்பதிவுகள் நீதிமன்றத்தில் ஆதாரமாகப் பயன்படுத்தப்படும்.
பேருந்து பாதைகள் பேருந்துகள் மற்றும் டேக்ஸிகளுக்கு மட்டுமே என நினைவுறுத்திய அதிகாரிகள், விதிமீறல்கள் போக்குவரத்தை சீர்குலைத்து, நெரிசலை மோசமாக்குவதை சுட்டிக் காட்டினர்.



