
கோலாலம்பூர், ஜனவரி-13, காஜாங், பத்து செம்பிலான் செராசில் ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் பூனைகளை உயிரோடு சாக்குப் பைகளில் கட்டிப் போட்டதாக நம்பப்படும் சிலரின் வாக்குமூலங்கள் பதிவுச் செய்யப்பட்டுள்ளன.
கால்நடை சேவைத் துறையான DVS-சின் சிலாங்கூர் மாநிலக் கிளை, அச்சம்பவம் தொடர்பில் காரொன்றையும் பறிமுதல் செய்துள்ளது.
வைரலான வீடியோவில் காணப்பட்ட சாக்குப் பைகள், கூண்டுகள் போன்றவையும் பறிமுதல் செய்யப்பட்டன.
கடந்த சனிக்கிழமை காலை 9 மணியிலிருந்து பிற்பகல் 3 மணி வரை அங்கு கட்டட மேலாண்மைக் குழு ஏற்பாடு செய்திருந்த துப்புரவுப் பணிகளின் போது அச்சம்பவம் நிகழ்ந்தது தொடக்கக் கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டது.
2015 விலங்குகள் நலச் சட்டத்தின் கீழ் சந்தேக நபர்கள் விசாரிக்கப்பட்டனர்.
விசாரணை அறிக்கை முழுமைப் பெற்றதும், மேல் நடவடிக்கைக்காக துணைத் தலைமை வழக்கறிஞர் அலுவலகத்திற்கு அனுப்பப்படுமென DVS கூறிற்று.
நேற்று வைரலான 37 வினாடி வீடியோவில், சில ஆடவர்கள் பூனைகளைப் பிடித்து சாக்குப் பைகளில் போடுவது தெரிந்தது.
எங்கேயோ கொண்டு போய் விடுவதற்காக, பின்னர் அப்பைகளை அவர்கள் காரில் போடுவதையும் அதில் காண முடிந்தது.
இதையடுத்து காஜாங் போலீஸ் நிலையத்தில் 2 புகார்கள் செய்யப்பட்டன.