
ஈப்போ, ஏப் 25 – கோலா காங்சாரில் உள்ள Tsung Wah தேசிய இடைநிலைப்பள்ளில் நேற்று அசிட் எனப்படும் எரி திராவகம் கசிவு ஏற்பட்டதைத் தொடர்ந்து அதனை சுத்தம் செய்ய பேராக் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை சுமார் இரண்டு மணி நேரம் செலவிட்டது.
மாலை மணி 3.30 க்கு தங்களுக்கு ஒரு பேரிடர் அழைப்பு வந்ததாக பேராக் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை செயல்பாட்டுப் பிரிவு உதவி இயக்குநர் சபரோட்ஸி நோர் அகமட் ( Sabarodzi Nor Ahmad ) தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து கோலா காங்சர் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தைச் சேர்ந்த ஒரு குழுவினர் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
பள்ளி சிற்றுண்டி நிலையத்திற்கு அருகிலுள்ள கிடங்கில் வைக்கப்பட்டிருந்த 20 லிட்டர் அசிட் டிரம் கசிந்தது. ஆசிரியர் ஒருவர் அந்த பகுதியை சுத்தம் செய்து கொண்டிருந்தபோது அசிட்டில் ஆவி வெளியேறத் தொடங்கியது.
அசிட் கசிவு முழுமையாகக் கட்டுப்படுத்தப்படுவதையும், மேலும் எந்த ஆபத்தையும் ஏற்படுத்தாமல் இருப்பதையும் உறுதி செய்வதற்காக, முழு பாதுகாப்பு உபகரணங்களுடன் தீயணைப்பு வீரர்கள் அந்தப் பகுதியை முழுமையாக சுத்தம் செய்ததாக சபரோட்ஸி தெரிவித்தார்.
தீயணைப்பு வீரர்கள் தரையை முழுமையாக தூய்மையாக்குவதை உறுதி செய்வதற்காக சுத்தம் செய்தனர் என்று அவர் கூறினார்.
அசிட் கொண்ட டிரம் சேமிப்பு அறையிலிருந்து பாதுகாப்பாக அகற்றப்பட்டு, ரசாயனத்தை வைக்கக்கூடிய இடத்திற்கு மாற்றப்பட்டது