
ஷா ஆலாம், ஏப்ரல்-23, ஷா ஆலாம் தாமான் ஸ்ரீ மூடா வெள்ளப் பிரச்னை தொடர்பில் கடந்த ஞாயிறன்று நடைபெற்ற அமைதி மறியலின் போது கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஸ் ஜம்புநாதனிடம் தகாத முறையில் திட்டியதற்காக, குடியிருப்பாளர் ஒருவர் வருத்தம் தெரிவித்து மன்னிப்புக் கேட்டுள்ளார்.
திடீர் வெள்ளத்தில் வீட்டிலிருந்த எல்லா பொருட்களையும் இழந்து விட்டதால் ஏற்பட்ட விரக்தியில் தாம் அவ்வாறு நடந்துகொண்டதாக அவ்வாடவர் கூறியிருக்கின்றார்.
மக்களின் குறை நிறைகளை மேலிடத்தில் கொண்டு சேர்ப்பவரே மக்கள் பிரதிநிதிகள் ஆவர்.
ஆக, ஆதங்கத்திலேயே பேசியிருந்தாலும், சட்டமன்ற உறுப்பினரிடம் தாம் அப்படி நடந்துகொண்டிருக்கக் கூடாது என்பதை ஒப்புக் கொள்வதாக, பிரகாஸுடனான சந்திப்புக்குப் பிறகு அவர் கூறினார்.
அவ்வாடவரின் மன்னிப்பை பெருமனதோடு ஏற்றுக்கொண்ட பிரகாஸ் ஜம்புநாதன், இந்த திடீர் வெள்ளப் பிரச்னைக்கு உரியத் தீர்வு காண தம்மால் ஆன அனைத்தையும் செய்வதாக உறுதியளித்தார்.
இதனிடையே, இந்த அமைதி மறியலின் போது, ஒரு பேருந்தில் ஏற்பாட்டுக் குழுவினர் ஆயேர் கூனிங் சட்டமன்ற தொகுதிக்குச் சென்று தேர்தல் பரப்புரையின் போது அங்குள்ள சூழல் தெரியாமல் தொந்தரவு செய்தது குறித்தும் குடியிருப்பாளர் ஒருவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.
சுமார் 1,500 பேர் கூடியிருந்த அன்றைய அமைதி மறியலின் போது, குடியிருப்பாளர்கள் சிலருக்கும் பிரகாஸுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
வெள்ளப் பிரச்னைக்கு நிரந்தர தீர்வுக் காண வலியுறுத்தி அப்பகுதி வாழ் மக்கள் அம்மறியலுக்கு ஏற்பாடு செய்திருந்தனர்