சட்டவிரோத குடியேறிகள் அறுவர் கைது படகு ஓட்டுநர் தப்பியோடினார்

தும்பாட், செப் 17 – பெங்காலான் ஹராம் கெபூனில் MPV புரோடுவா அல்சா வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை செய்த கோலாத் திரெங்கானு பொது நடவடிக்கை குழுவின் அதிகாரிகள் மியன்மார் பிரஜைகள் என நம்பப்படும் சட்டவிரோத குடியேறிகளில் அறுவரை கைது செய்தனர். எனினும் அவர்களை கொண்டு வந்ததாக நம்பப்படும் நபர் விடியற்காலை 6.30 மணியளவில் படகின் மூலம் தாய்லாந்திற்கு தப்பிச் சென்றான் என பொது நடவடிக்கை பிரிவின் அதிகாரி டத்தோ நிக் ரோஸ் அஷான் நிக் அப்துல் ஹமிட் ( Nik Roz Azhan NiK Ab Hamid ) தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட சட்டவிரோத குடியேறிகளில் நால்வர் பெண்களாவர். இவர்கள் அனைவரும் சடடவிரோத நுழைவு மையம் வழியாக புதிதாக நாட்டிற்குள் கொண்டு வரப்பட்டதாக நம்பப்படுகிறது. மேல் நடவடிக்கைக்காக அவர்கள் துப்பாட் மாவட்ட போலீஸ் தலைமையகத்திற்கு கொண்டுச் செல்லப்பட்டனர். குடிநுழைவுச் சட்டத்தின் கீழ் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்படுவதாக நிக் ரோஸ் அஷான் கூறினார்.