
கோலாலம்பூர், ஜூலை 8 – நேற்று, குடிவரவு அமலாக்கப் பிரிவைச் (IMIGRESEN) சேர்ந்த அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் குழு, கோலாலம்பூரில் வெவ்வேறு இடங்களில் நடத்திய அதிரடி பரிசோதனையில், மொத்தம் 60 சந்தேகத்திற்குரிய சட்டவிரோத குடியேறிகள் (PATI) கைது செய்யப்பட்டுள்ளனர் என்று கோலாலம்பூர் குடிவரவு இயக்குநர் வான் முகமது சௌபி வான் யூசோஃப் கூறியுள்ளார்.
நடவடிக்கையின் போது சோதனை செய்யப்பட்ட மொத்தம் 137 நபர்களில், பாகிஸ்தான், இந்தோனேசியா, மியன்மார் மற்றும் வங்காளதேசத்தைச் சார்ந்த மொத்தம் 60 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அதில் 31 ஆண்களும், 29 பெண்களும் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பரிசோதனைகள் கோலாலம்பூர் ஜாலான் சேராஸ், சௌ கிட் அருகேயுள்ள ஜாலான் ராஜா லாவுட் மற்றும் பசார் புடு அருகேயுள்ள ஜாலான் யூவில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த நடவடிக்கையின் போது, சட்டவிரோத குடியேறிகள் கைது செய்யப்படுவதைத் தவிர்க்க பல்வேறு தந்திரங்களைப் பயன்படுத்தியுள்ளனர் என்றும், அவர்களில் சிலர் இரண்டாவது மாடியிலிருந்து குதிக்கத் தயாராக இருந்தனர் என்றும் மேலும் சிலர் மயக்கம் வருவது போல் நடித்தனர் என்றும் வான் முகமது குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கு குடியேற்றச் சட்டத்தின் கீழ் பதிவுச் செய்யப்பட்ட நிலையில், அனைத்து கைதிகளும் கோலாலம்பூர் குடியேற்றப் பிரிவின் மேல் நடவடிக்கைகளுக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.