
கோத்தா கினபாலு, டிச 17 – சந்தேக நபரின் காரை துரத்தியபின் அக்காரின் கதவை போலீஸ் அதிகாரி ஒருவர் வலுக்கட்டாயமாகத் திறப்பதைக் காட்டும் இரண்டு நிமிட டேஷ்கேம் வீடியோ, info Lalu Lintas Sabah பதிர்ந்ததைத் தொடர்ந்து வைரலாகியுள்ளது.
போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையில் போலீசாரால் தடுத்து நிறுத்தப்படுவதற்கு முன்பு, போக்குவரத்துக்கு எதிராக ஒரு கார் செல்வதை இந்தக் காட்சிகள் படம்பிடித்துள்ளன.
அக்கார் நிறுத்தப்பட்டபோது , சந்தேக நபர் காரிலிருந்து இறங்க பலமுறை மறுத்ததால், போலீஸ் அதிகாரி தனது வெறும் கைகளால் ஓட்டுநரின் கார் கதவைத் திறப்பதைக் காணமுடிந்தது.
பதட்டமான இந்த சம்பவம் அருகிலுள்ள வாகன ஓட்டிகளின் கவனத்தை விரைவாக ஈர்த்ததோடு , அவர்களில் பலர் தங்களது வாகனத்தை நிறுத்தி, சந்தேக நபரைத் தடுக்க போலீஸ் அதிகாரிக்கு உதவ முன்வந்த வேளையில் மற்றவர்கள் சாலையோரத்தில் இருந்து இச்சம்பவத்தை பார்த்துக் கொண்டிருந்தனர். இந்த வீடியோ ஆன்லைனில் பரவலானதை தொடர்ந்து , பல நெட்டிசன்கள் அதிகாரியின் விரைவான நடவடிக்கையை பாராட்டி வர்ணித்தனர்.
இந்த வீடியோ ஆயிரக்கணக்கான பார்வையார்களையும் பகிர்வுகளையும் குவித்துள்ளது. பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டுதல், சட்ட அமலாக்கத்தில் பொதுமக்களின் ஒத்துழைப்பு மற்றும் சாலையோரக் கைதுகளின் போது அதிகாரிகள் எதிர்கொள்ளும் அபாயங்கள் பற்றிய ஆன்லைன் விவாதங்களையும் இந்த வீடியோ தூண்டியுள்ளது.



