
திருவனந்தபுரம், அக்டோபர்-6,
கடந்த 2019-ஆம் ஆண்டு ஒரு வீட்டில் சபரிமலை தங்கத் தகடு பலகைகளுக்கு பூஜை நடைபெற்று, அதில் பிரபல மலையாள நடிகர் ஜெயராம் பங்கேற்றது தெரியவந்துள்ளது.
இதனால், சபரிமலை தங்கக் கவச விவகாரம் புதிய திருப்பத்தைச் சந்தித்துள்ளது.
ஜெயராமும் அது தொடர்பாக எழுந்த குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளித்துள்ளார்.
2019-ஆம் ஆண்டு சென்னை அம்பத்தூரில் உன்னி கிருஷ்ணன் பொட்டி (Unnikrishnan Potty) என்பவர் ஏற்பாடு செய்த விழாவில் சபரிமலை துவாரபாலகர் சிலைகளின் தங்கத் தகடுகள் காட்சிப்படுத்தப்பட்டன; அதில் ஜெயராம் கலந்து கொண்ட வீடியோ தான் தற்போது வைரலாகியுள்ளது.
இது குறித்து பேசிய ஜெயராம், தாம் 50 ஆண்டுகளாக அய்யப்ப பக்தனாக சபரிமலைக்கு சென்று வருவதாகவும், அந்த சென்னை நிகழ்ச்சியில் கலந்து கொள்வது தனக்கு ஒரு பெரிய ஆசீர்வாதமாக இருந்ததாகவும் சொன்னார்.
ஆனால், அது இப்படி ஒரு நிலைக்கு வந்து நிற்கும் என கனவிலும் தாம் நினைக்கவில்லை என்றார்.
“உண்மை வெளிவரும். நான் ஏதேனும் தவறு செய்திருந்தால் அதற்கான விளைவுகளை சந்திக்க தயார்” எனவும் ஜெயராம் தெரிவித்தார்.
தானோ அல்லது வேறு யாரோ அய்யப்ப பெருமானின் தெய்வீக வடிவங்களை தவறான நோக்கத்துடன் தொட்டிருந்தால், கடுமையான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்றும் அவர் சொன்னார்.
துவாரபாலகர் சிலையின் தங்கக் கவசத்திலிருந்து 4 கிலோ தங்கம் மாயமானது குறித்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், ஜெயராம் வீடியோ புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.