
சபாவில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 வயது சிறுமி பலி; இரண்டு வீடுகள் தீயில் கருகின
சபா, பிப்ரவரி 10 –
இன்று அதிகாலை சபா Tambunan மாவட்டத்தில் உள்ள Kampung Patau பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில், ஆறு வயது சிறுமி தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களைப் பெரும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது.
தீயில் முற்றிலும் சேதமடைந்த இரண்டு வீடுகளில் ஒன்றின் அறைக்குள் சிறுமியின் உடல் கருகிய நிலையில் மீட்கப்பட்டது. சம்பவம் குறித்து காலை 4 மணியளவில் அவசர அழைப்பு கிடைத்ததாக தம்புனான் தீயணைப்பு மற்றும் மீட்புப் படை நிலையத் தலைவர் Mitchell Francis George தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, எட்டு தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். இந்த தீ விபத்தில் இரண்டு வீடுகளும், மூன்று வாகனங்களும் தீக்கிரையாகின. மேலும், தப்பிச் செல்ல முயன்ற மற்றொரு நபர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
தீ விபத்துக்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.



