
கோலாலாம்பூர், ஜூலை-8 – மலேசியாவின் பெரும்பாலான உணவுகளை வெங்காயம் இல்லாமல் சமைக்க முடியாது, இதனால் வெங்காயம் நாட்டுக்கு மிகக் கூடுதல் செலவாகும் உணவுப் பொருட்களில் ஒன்றாக விளங்குகிறது.
மலேசியர்கள் வருடத்திற்கு சுமார் 750,000 டன் வெங்காயம் பயன்படுத்துகின்றனர்; இவ்வெண்ணிகையானது முழுமையாக ஏற்றப்பட்ட 7 விமானக் கப்பல்களின் எடைக்கு இணையாகும் என்கிறார் கூட்டரசு விவசாய விநியோக சம்மேளனமான FAMA-வின் தலைவர் அமினுடின் சுல்கிப்லி.
2022-ஆம் ஆண்டில் மட்டும் மலேசியா 687,000 மெட்ரிக் டன் வெங்காயத்தை இறக்குமதி செய்தது; அவற்றில் 38,000 டன் சிறிய வெங்காயமும் அடங்கும்.
அதன்படி, ஒரு மலேசியர் மட்டும் சராசரியாக 1.2 கிலோ சிறிய வெங்காயம் பயன்படுத்துவதாக விவசாய மற்றும் உணவு உத்தரவாத அமைச்சர் டத்தோ ஸ்ரீ மொஹமட் சாபூ ஏற்கனவே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
கோவிட் பெருந்தொற்றுக்குக்குப் பிறகு நாட்டில் வெங்காயத் தேவைகள் வேகமாக உயர்ந்துள்ளன; ஒரேடியாக எகிறாமல் அந்த தேவைகள் தொடர்ந்து நீடிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.
2023-ல், மலேசியாவின் வெங்காய இறக்குமதி 1 பில்லியன் ரிங்கிட்டைத் தாண்டி, 2024-ல் 1.48 பில்லியன் ரிங்கிட்டைநெருங்கியுள்ளது; இது கடந்த 5 ஆண்டுகளில் 67% உயர்வாகும்.
FAMA-வின் நேரடி வெங்காய இறக்குமதி செலவுகளும் 2021-லிருந்து 2024-ல் இரட்டிப்பாகியுள்ளன.
46.3% மூலம் மலேசியாவின் முக்கிய வெங்காய ஏற்றுமதியாளராக சீனா விளங்குகிறது; இந்தியா 19.2% பாகிஸ்தான் 15.4% என மலேசியாவின் மொத்த வெங்காய இறக்குமதியில் சுமார் முப்பதில் ஒரு பங்கை ஆக்கிரமித்துள்ளன.
மற்றவை நெதர்லாந்து, மியன்மார், தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளாகும்.
உள்நாட்டில் 30% சிறிய வெங்காயம் உற்பத்தி செய்ய முடிந்தால், மொத்த இறக்குமதி செலவின் ஒரு பகுதியான 300 மில்லியன் ரிங்கிட்டை மிச்சப்படுத்தலாம் என அமைச்சர் மாட் சாபு ஏற்கனவே நம்பிக்கை தெரிவித்திருந்தார்.
அதனை ஆமோதித்த அமினுடின், வழக்கமான விவசாய முறைகளுக்கு மாற்றாக organic விவசாய முறைகள் பயன்படுத்தப்பட வேண்டிய அவசியத்தை முன்னிறுத்தினார்.
பூச்சிக்கொல்லிகளை அதிகம் சார்ந்திருப்பதைக் குறைப்பது உற்பத்திச் செலவையும் குறைக்கும் என்றார் அவர்.