
கோலாலாம்பூர், செப்டம்பர்-17 – மலேசியத் தமிழ்ப் படைப்பாற்றல் துறையில் மிகச் சிறந்த படைப்பாளிகள் உருவானால் தான் நமக்கும் நல்ல படைப்புகள் கிடைக்குமென, ம.இ.கா தேசியத் துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ எம். சரவணன் கூறியுள்ளார்.
கோலாலாம்பூர் Crystal Crown ஹோட்டலில் 2-நாள் விழாவாக நடைபெற்ற மரபு கவிதை இரண்டாம் பன்னாட்டு மாநாட்டைத் தலைமையுரையாற்றித் தொடக்கி வைத்த போது அவர் அவ்வாறு சொன்னார்.
சிற்றிலக்கியங்களின் சிறப்பைத் தாங்கி நிற்கும் இந்தப் பன்னாட்டு மரபு கவிதை மாநாடு ஒரு மகத்தான முயற்சியாகும்; நமது தமிழ் மொழி வளத்தையும், மரபு கவிதைகளின் செழுமையையும் உலகறியச் செய்வதும் நமது கடமையாகும்.
எனவே இதுபோன்ற மாநாடுகள் மூலம் அம்முயற்சியை முன்னெடுக்கும் ஏற்பாட்டுக் குழுவுக்கு, தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான சரவணன் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.
முனைவர் Dr குமரன் வேலு, இணைப் பேராசிரியர் Dr மனோன்மணி தேவி அண்ணாமலை, மலேசியத் தமிழ் நெறிக் கழகத்தின் திருமாவளவன் உள்ளிட்டோரும் நிகழ்வில் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக மூத்த கவிஞர்களான முகிலரசன் – திலகவதி தம்பதியருக்கும், இளம் கவிஞர் தங்கமணி சுகுமாறனுக்கும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
மலேசியத் தமிழ்ப் புலவர் சங்கம், மலேசியத் தமிழ்க் கவிதை வளர்மன்றம், மலேசியத் தமிழ்க் கல்வியாளர் மகிழ்மன்ற ஏற்பாட்டில் மலேசியத் தமிழ்ப் பாவலர் மன்ற ஆதரவுடன் நடைபெற்ற இந்நிகழ்வில் மலேசியா மட்டுமின்றி சிங்கப்பூர் – இந்தியாவைச் சேர்ந்தவர்கள் உட்பட சுமார் 80 பேர் பங்கேற்றனர்.