
கோலாலாம்பூர், செப்டம்பர்-2 – சபாவில் மரணமடைந்த முதலாம் படிவ மாணவி சாரா கைரினா மகாதீரின் சவப்பரிசோதனையில் தாமும் பங்கெடுத்ததாக, டிக் டோக்கில் கூறிக் கொண்ட போலி மருத்துவர் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுகிறார்.
தொடர்புத் துறை அமைச்சர் டத்தோ ஃபாஹ்மி ஃபாட்சில் அதனை உறுதிப்படுத்தினார்.
அவ்வாடவர் மீதான குற்றச்சாட்டு தொடர்பில் போலீஸார் மேல் விவரங்களை வழங்குவர் என ஃபாஹ்மி சொன்னார்.
Dato Prof Dr Tunku Iskandar என்ற டிக் டோக் கணக்கின் உரிமையாளரான அந்நபர், இணைய வசதியின் தவறான பயன்பாடு தொடர்பில் ஆகஸ்ட் 19-ஆம் தேதி MCMC எனப்படும் தொடர்பு – பல்லூடக ஆணையத்தால் விசாரணைக்கு அழைக்கப்பட்டார்.
சாராவின் சவப்பரிசோதனையில் பங்கெடுத்ததாக அந்நபர் கூறிக் கொண்ட போதிலும், சுகாதார அமைச்சிடம் சரிபார்த்ததில் அது உண்மையல்ல என கண்டறியப்பட்டதை அடுத்து அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டது.
பகடிவதைக்கு ஆளானதாக நம்பப்படும் சாரா கைரினாவின் மரணம் பெரிய அளவில் பேசப்பட்ட போது, அதைப் பயன்படுத்தி பிரபல்யம் தேடுவதற்காக அவ்வாடவர் அவ்வாறு செய்ததாக சந்தேகிக்கப்படுகிறது.
இந்நிலையில், 1998-ஆம் ஆண்டு தொடர்பு – பல்லூடக ஆணையச் சட்டத்தின் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு அதிகபட்சமாக 50,000 ரிங்கிட் அபராதமும் ஈராண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்படலாம்.
போலீஸ் மறுபக்கம் தேச நிந்தனைச் சட்டத்தின் கீழ் அச்சம்பவத்தை விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.