
கோலாலம்பூர், மார்ச் 17 – இரு புறங்களையும் போக்குவரத்து நிலவரத்தைக் கவனிக்காமல் பாதசாரி ஒருவர் திடீரென சாலையைக் கடந்தபோது, நிலைமை கவலைக்கிடமாக மாறியது.
ஜாலான் பெரெக் 12 சாலையில் பெரோடுவா பெஸ்ஸா மற்றும் புரோட்டான் சாகா கார்கள் நேற்று மோதிக்கொண்ட விபத்தைக் காட்டும் சிசிடிவி பதிவு ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
காலை மணி 10.23 அளவில் நடந்த இந்தச் சம்பவத்தில், ஒரு நீல நிற பெரோடுவா பெஸ்ஸா கார் இடதுபுறப் பாதைக்குள் நுழைவதும், அதைத் தொடர்ந்து அதே திசையிலிருந்து ஒரு புரோட்டான் சாகா கார் வருவதும் காணப்பட்டது.
அந்த பாதசாரியின் மீது மோதுவதைத் தவிர்ப்பதற்காக, பெஸ்ஸா கார் ஓட்டுநர் திடீரென வாகனத்தை நிறுத்தியதால் அக்காரில் புரோட்டோன் சாகா மோதியது.
இதனால் புரோட்டான் சாகாவின் முன்பகுதி கடுமையாகச் சேதமடைந்திருப்தை அந்த காணொளியில் காண முடிந்தது .
பெரோடுவா பெஸ்ஸாவின் நிலை என்னவென்று உறுதிப்படுத்த முடியவில்லை. மேலும் ஏமாற்றமளிக்கும் வகையில், இந்தச் சம்பவத்திற்குக் காரணமான பாதசாரி, எந்த உதவியும் செய்யாமல் அந்த இடத்தை விட்டுச் செல்வதையும் பார்க்க முடிந்தது.
இந்த காணொளியை கண்ட நெட்டிசன்கள் பல்வேறு விதமான கருத்துக்களை பதிவிட்டனர்.



