
கோலாலாம்பூர், ஜூலை-28- சனிக்கிழமை நடைபெற்று முடிந்த ‘Turun Anwar’ பேரணி கொள்கைக்காக அல்ல – வாழ்க்கைக்காக.
மாணவர்கள், தொழிலாளர்கள், ஓய்வுபெற்றோர் என பலர் அரசியலுக்காக அல்லாமல் தங்களின் ‘வயிற்றுக்காக’ சாலைகளில் இறங்கினர்.
விலைவாசி உயர்வு, சம்பள உயர்வின்மை, பலவீனமடைந்து வரும் பொதுச் சேவை போன்றவை மக்களை நெடுங்கடலில் மூழ்கடிக்கிறது.
இது பணக்காரர்களின் போராட்டம் அல்ல – தன்மானத்திற்கான குரல் என, கிள்ளான் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சாந்தியாகோ கூறுகிறார்.
மக்கள் எதிர்பார்ப்பது – நன்கு திட்டமிடப்பட்ட மானியங்கள், நியாயமான குறைந்தபட்ச ஊதியம், மக்கள் சக்திக்குட்பட்ட சுகாதாரச் சேவை மற்றும் கிராமப் பகுதிக்கான முதலீடுகளே – மாறாக, சுலோகமோ கருணையோ அல்ல.
ஆனால் இதே பேரணியை சில சந்தர்ப்பவாத அரசியல்வாதிகள் கைப்பாவையாகப் பயன்படுத்திக் கொண்டதையும் மறுக்க முடியாது என, சார்ல்ஸ் சுட்டிக் காட்டினார்.
அதிகாரம் கையை விட்டுப் போனதால் ‘கலங்கிப்’ போன கைசுத்தமில்லா அரசியல்வாதிகள் சிலர், இப்போது திடீரென நீதி கேட்டு போராடுவதாக தங்களைக் காட்டிக் கொள்கின்றனர். அவர்களின் இந்த நடிப்பெல்லாம் வெறும் பழிவாங்கும் நாடகமே என சார்ல்ஸ் சாடினார்.
எது எப்படி இருப்பினும், போராட்டம் என்பது ஜனநாயக உரிமையாகும்; மதச்சார்பற்ற சமத்துவம், ஊழல் இல்லாத நிர்வாகம் போன்றவற்றை வலியுறுத்தி உண்மையான மக்களுடைய தேவைகளை பிரதிபலித்தால் – அது மதிக்கத்தக்கது என்றார் அவர்.
வாக்குறுதிகளை நிறைவேற்ற பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கு இன்னும் நேரம் இருக்கிறது; அதை அவர் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
மக்களுக்கு இப்போது உண்மையான பொருளாதார நீதி மற்றும் நம்பிக்கையைக் காக்கும் துணிச்சலான மாற்றங்களே தேவையென, சார்லஸ் அறிக்கையொன்றில் கூறினார்.
துன் Dr மகாதீர் மொஹமட், தான் ஸ்ரீ முஹிடின் யாசின் ஆகியோர் தலைமையில் சுமார் 18,000 எதிர்கட்சி ஆதரவாளர்கள் தலைநகரில் Turun Anwar பேரணியில் பங்கேற்றனர்.