
கோலாலம்பூர், ஏப் 2-இன்று அதிகாலை கோலாலம்பூரில் உள்ள ஜாலான் சுல்தான் இஸ்மாயில் சாலையில், சிவப்பு சமிக்ஞை விளக்கை மீறிச் சென்று இரண்டு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மீது மோதியதாகக் கூறப்படும் 25 வயது ஆடவன் கைது செய்யப்பட்டான்.
அதிகாலை சுமார் 4.27 மணியளவில் இந்த மோதல் நிகழ்ந்ததாகத் கோலாலம்பூர் போக்குவரத்து விசாரணை மற்றும் அமலாக்கத்துறைத் தலைவர் Zamzuri Isa தெரிவித்தார்.
சந்தேக நபர் ஓட்டிச் சென்ற ஹோண்டா சிட்டி கார், அந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மீது மோதுவதற்கு முன்பு சிவப்பு எச்சரிக்கை விளக்கை மீறிச் சென்றதாக நம்பப்படுகிறது.
அந்த சம்பவத்தில் 24 வயது இளைஞரின் இடது கால் துண்டிக்கப்பட்டது, அதே நேரத்தில் 19 வயது இளைஞருக்கு இடது கை மற்றும் இடது காலில் எலும்பு முறிவுகள் ஏற்பட்டன.
அவர்கள் சிகிச்சைக்காக கோலாலம்பூர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். கார் ஓட்டுநருக்கு கையில் சிறு காயங்களும், காரில் இருந்த பயணிக்கு தலையில் காயங்களும் ஏற்பட்டன.
ராவாங்கில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தபோது கார் ஓட்டுநர் கைது செய்யப்பட்டதோடு அவரிடம் மேற்கொள்ளப்பட்ட இரத்தப் பரிசோதனையில் ஓட்டுநரின் மது அளவு சட்ட வரம்பிற்குள் இருப்பது கண்டறியப்பட்டது.
1987 ஆம் ஆண்டின் சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் 42 (1)- பிரிவின் கீழ் கவனக்குறைவாக அல்லது ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டியது தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
Threads சமூக ஊடகத் தளத்தில் காணொளி வைரலானதைத் தொடர்ந்து இந்தச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.



