சிங்கப்பூரில் திடீரென உள்வாங்கிய சாலை; காரோடு பள்ளத்தில் விழுந்த பெண்

சிங்கப்பூர், ஜூலை-27 – சிங்கப்பூர், Jalan Tanjong Katong-கில் திடீரென சாலை உள்வாங்கியதில், காரோடு பெண் பள்ளத்தில் விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
நேற்று மாலை 5 மணியளவில் சிங்கப்பூர் நீர் விநியோக நிறுவனத்தின் கட்டுமானத் தளமருகே அச்சம்பவம் நிகழ்ந்தது.
சிங்கப்பூர் பொது தற்காப்புப் படை விரைந்து செயல்பட்டு, அப்பெண்ணைப் பாதுகாப்பாக மீட்டு மேலே கொண்டு வந்தது.
அப்போது அவர் சுயநினைவுடன் இருந்தார்; சிகிச்சைக்காக அவர் உடனடியாக மருத்துவமனை கொண்டுச் செல்லப்பட்டார்.
தண்ணீர் தேங்கியிருந்த அந்த திடீர் பள்ளத்தில் அப்பெண்ணின் கார் கிட்டத்தட்ட முழுவதுமாக மூழ்கும் நிலையிலிருப்பதை, முன்னதாக சமூக ஊடகங்களில் வைரலான வீடியோக்களில் காண முடிந்தது.
இவ்வேளையில் அச்சம்பவத்தில் இரு முக்கிய நிலத்தடி நீர் குழாய்கள் சேதமடைந்துள்ளதாகவும், அதனை பழுதுபார்க்கும் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
சாலை உள்வாங்கியதற்கான காரணம் குறித்து உடனடி விசாரணைகள் தொடங்கியுள்ளன.