சிங்கப்பூரில் 18,000 க்கும் மேற்பட்ட வேப் பறிமுதல்; மலேசியர் கைது

சிங்கப்பூர், செப்டம்பர்-17,
மலேசியர் ஒருவர், திங்கட்கிழமை சிங்கப்பூர் துவாஸ் சோதனைச் சாவடியில், 18,400 க்கும் மேற்பட்ட வேப் உபகரணங்கள் மற்றும் அது தொடர்பான 1,400 பொருட்களை சட்டவிரோதமாக கடத்த முயன்றபோது கைதுச் செய்யப்பட்டார்.
இது, செப்டம்பர் 1 முதல் கடுமையான தண்டனைகள் அமல்படுத்தப்பட்ட பிறகு, சிங்கப்பூரின் தரைச் சோதனை மையங்களில் கண்டறியப்பட்ட மிகப்பெரிய பறிமுதல் ஆகுமென என குடிநுழைவு மற்றும் சோதனைச்சாவடி அதிகாரிகள் தெரிவித்தனர்.
மலேசியாவில் பதிவுச் செய்யப்பட்ட லாரி, முன்கூட்டிய அபாய மதிப்பீட்டின் அடிப்படையில் சோதனைக்குத் தேர்வுச் செய்யப்பட்டது.
அப்போது “மோட்டார் இயக்கப்படும் வெளிப்புற திரை பாகங்கள்” என்று அறிவிக்கப்பட்ட சரக்குகளில் அந்த வேப் பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
சந்தேக நபரோடு பறிமுதல் ஆன பொருட்களும் மேல் விசாரணைக்காக சுகாதார அறிவியல் ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டன.
வேப் தயாரிப்புகளின் சட்டவிரோத கடத்தலை கண்டறிந்து தடுக்க மேற்கொள்ளப்படும் ஒருங்கிணைந்த முயற்சியாக, விமானம், தரை மற்றும் கடல் சோதனை மையங்களில் சோதனைகள் கடுமையாக்கப்பட்டுள்ளதாக, கடந்த மாதம், ICA எனப்படும் சிங்கப்பூர் குடிநுழைவு மற்றும் சோதனைச்சாவடி அதிகாரிகள் கூறியிருந்தனர்.