
கோலாலம்பூர், பிப்ரவரி-27- கடந்தாண்டு நாட்டில் அதிகமான போதைப் பித்தர்களைப் பதிவுச் செய்த மாநிலமாக கிளந்தான் விளங்குகிறது.
உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைஃபுடின் நாசூத்தியோன் இஸ்மாயில் அதனைத் தெரிவித்தார்.
போதைப் பொருள் பழக்கம் மற்றும் அதற்கு அடிமையாதல் தொடர்பில், ஒவ்வொரு 100,000 குடியிருப்பாளர்கள் வீதம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில், 1,130 பேருடன் கிளந்தால் முதலிடத்தில் உள்ளது.
974 பேருடன் திரங்கானு இரண்டாமிடத்திலும், 965 பேருடன் பெர்லிஸ் மூன்றாமிடத்திலும் உள்ளன; நான்காவது ஐந்தாவது இடங்களை முறையே கெடாவும், பினாங்கும் பிடித்துள்ளன.
கெடாவில் 898 போதைப் பித்தர்களும், பினாங்கில் 803 போதைப் பித்தர்களும் கடந்தாண்டில் பதிவாகினர்; சரவாக்கில் அவ்வெண்ணிக்கை 425 பேராக உள்ளது.
கடந்தாண்டு போதைப் பொருள் பழக்கம் மற்றும் அதற்கு அடிமையாதல் தொடர்பில் மொத்தமாக 192,857 சம்பவங்கள் பதிவானதாக, மக்களவையில் அவர் சொன்னார்.
இனவாரியாகப் பார்த்தால், ஆக அதிகமாக மலாய்க்காரர்களிடையே 145,877 சம்பவங்கள் பதிவாகியுள்ளன;
14,935 பேருடன் இந்தியர்கள் இரண்டாமிடத்தை வகிப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மூன்றாமிடத்தில் 14, 861 சீனர்களும், அதற்கடுத்தடுத்த இடங்களில் சபா- சரவாக் மற்றும் பிற இனங்களைச் சேர்ந்தவர்களும் உள்ளனர்.
போலீஸ், சுகாதார அமைச்சு, போதைப் பித்தர்களுக்கான தனியார் மறுவாழ்வு மையங்கள் உள்ளிட்டவற்றின் தரவுகளின் அடிப்படையில், AADK எனப்படும் தேசியப் போதைப் பொருள் தடுப்பு நிறுவனம் அந்த புள்ளிவிவரப் பட்டியலைத் தயாரித்துள்ளது.