
கோலாலம்பூர், ஜன 27 – ஜோகூர், குளுவாங் (Kluang) , தாமான் ஸ்ரீ இம்பியான் (Taman Seri Impian) குடியிருப்பு பகுதியில் யானை ஒன்று நடமாடும் 40 வினாடிகளைக் கொண்ட காணொளி சமூக வலைத்தளத்தில் வைரலானது. அந்த யானை சாலையில் உலா வருவதும், வீடுகளைக் கடந்து செல்வதும், தும்பிக்கையை அசைப்பதும் காணமுடிந்தது. அந்த யானை எப்படி அந்த குடியிருப்பு பகுதியில் நுழைந்தது என்பது தெரியவில்லை. ஆனால் இன்று அதிகாலை மணி 2. 13 அளவில் அந்த காணொளி பதிவு செய்யப்பட்டுள்ளது. பல நெட்டிசன்கள் அந்த யானையைப் பற்றிய தங்களது கவலையை விரைவாக வெளிப்படுத்தினர்.
உண்மையில் அந்த யானை பரிதாபம்தான். ஒரு காலத்தில் அதன் வசிப்பிடமாக இருந்த அந்த இடம் இப்போது குடியிருப்பு பகுதிகளாக இருக்கும் நினைவு அதற்கு வந்திருக்கலாம் என lina 77165 என்ற பயனர் பதிவிட்டுள்ளார். தொழிற்சாலைகள் மற்றும் வீடுகளை கட்டுவதற்காக காடுகள் அழிக்கப்படுகின்றன. அவை எங்கு செல்லும் ? அது அவற்றின் தவறு அல்ல என்று மைக்கேசுதாஸ் (mikeyessudas) என்பவர் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் கிட்டத்தட்ட 7,400 பேரின் likes-களையும் 300 க்கும் மேற்பட்டோரின் கருத்துகளையும் பெற்றுள்ளது.