
பிறை, ஜூலை-9 – சிம்பாங் அம்பாட், அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலய மண்டப நிலம் வாங்குதலுக்கான விருந்தோம்பலில், 150,000 ரிங்கிட் நிதி திரண்டுள்ளது.
வீடமைப்புத் துறைக்கான பினாங்கு ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ ஸ்ரீ எஸ். சுந்தர ராஜூ அந்த மகிழ்ச்சி செய்தியை அறிவித்தார்.
நன்கொடைத் திரட்டும் விருந்தோம்பல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய போது அவர் அவ்வாறு சொன்னார்.
130 ஆண்டுகள் வரலாற்றுச் சிறப்புமிக்க அக்கோயிலுக்கு அருகில் அமைந்துள்ள ஒரு நிலத்தை கையகப்படுத்துவதற்கு உதவி கோரி, ஓராண்டுக்கு முன் கோயில் நிர்வாகம் டத்தோ ஸ்ரீ சுந்தர ராஜுவை அணுகியது.
இந்தக் கோவிலின் கலாச்சார மற்றும் ஆன்மீக முக்கியத்துவத்தைப் புரிந்துகொண்டு, கோவிலின் நலனுக்காக நில விலையைக் குறைப்பது குறித்து சொத்து மேம்பாட்டாளருடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தினார்.
ஏறக்குறைய 4,317 சதுர அடி பரப்பளவிலான அந்நிலத்தைக் கையகப்படுத்தத் தேவையான மொத்த செலவு 300,000 ரிங்கிட்டாகும்.
இந்நிலையில், ஆண்டுதோறும் 100,000 ரிங்கிட் என்ற 3 ஆண்டு தவணைத் திட்டத்துடன் கொள்முதல் ஒப்புக் கொள்ளப்பட்டது.
கடந்தாண்டு முதல் தவணைப் பணமாக டத்தோ ஸ்ரீ சுந்தர ராஜுவே தனிப்பட்ட முறையில் 50,000 ரிங்கிட்டை பங்களித்தார்.
இரண்டாவது ஆண்டில் இருக்கும் இந்நேரத்தில் 150,000 ரிங்கிட் நன்கொடை திரட்டப்பட்டிருப்பது, ஆலயத்தின் எதிர்காலத்திற்கான ஒரு முக்கிய மைல்கல் என அவர் வருணித்தார்.
இந்த அர்த்தமுள்ள நோக்கத்திற்கு பங்களித்த அனைத்து தாராள நன்கொடையாளர்களுக்கும் டத்தோ ஸ்ரீ சுந்தர ராஜூ தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
இத்தகைய கூட்டு முயற்சிகள் மூலம்தான் நமது கோயில்களின் கலாச்சார மற்றும் ஆன்மீக பாரம்பரியத்தை நாம் தொடர்ந்து பாதுகாத்து வலுப்படுத்து முடியும் என்றார் அவர்.