
கோலாலம்பூர், டிசம்பர்-4 – அண்மையில் காரொன்றின் கண்ணாடியை உடைத்து வைரலான ஆடவருக்கு கோலாலம்பூர் மேஜிஸ்திரேட் நீதிமன்றம் 1,000 ரிங்கிட் அபராதம் விதித்துள்ளது.
சதிநாச வேலையில் ஈடுபட்டதாக, குற்றவியல் சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்ட குற்றச்சாட்டை 39 வயது கைருல் அனுவார் தாஹிர் (Khairul Anuar Tahir) ஒப்புக் கொண்டதை அடுத்து அத்தண்டனை வழங்கப்பட்டது.
நவம்பர் 26-ஆம் தேதி விடியற்காலை நிகழ்ந்த சம்பவத்தில், தனது பாதையில் திடீரென புகுந்த பெரோடுவா அக்சியா காரை மோதுவதைத் தவிர்ப்பதற்காக, புகார்தாரரான புரோட்டோன் வீரா காரோட்டி ஹாரன் அடித்துள்ளார்.
இரு கார்களும் Gleneagles மருத்துவனை அருகே சாலை சமிக்ஞை விளக்குப் பகுதியில் நின்ற போது, அக்சியா காரிலிருந்து இறங்கி வந்த சந்தேக நபரான பயணி, ஆத்திரத்தில் வீரா காரின் கதவை காலால் எட்டி உதைத்தார்.
அதில் கதவு மடங்கியது.
அதோடு கார் கண்ணாடியையும் குத்தி உடைத்தார்.
இதையடுத்து கைருலும் அக்சியா காரோட்டுநரும் டிசம்பர் 1-ம் தேதி கைதாகினர்.
கைருலைக் குற்றம் சாட்ட முடிவுச் செய்த அரசு தரப்பு, அவரின் காரோட்டுநரை தனது சாட்சியாக்கிக் கொண்டது.