
ஜோகூர் பாரு, ஆக 29 – பாலியல் வன்கொடுமை கும்பலிடமிருந்து இரண்டு கைக்குழந்தைகள் உட்பட ஐந்து குழந்தைகளை போலீசார் மீட்டுள்ளதாக புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத்துறை இயக்குநர் டத்தோ எம். குமார் தெரிவித்தார்.
இரண்டு மாதங்கள் முதல் ஐந்து வயதுடைய அந்த குழந்தைகளை சமூக வலைத்தளங்கள் மூலமாக அந்த கும்பல் விற்பனை செய்துள்ளாக நம்பப்படுகிறது.
மீட்கப்பட்ட குழந்தைகள் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக நம்பப்படுகிறது.
கர்ப்பிணித் தாய்மார்களுக்கு தங்கள் குழந்தைகளை தத்தெடுப்பதற்கு 1,500 ரிங்கிட் முதல் 3,500 ரிங்கிட்வரை வழங்குவதே அக்கும்பலின் செயல்பாடாக அமைந்ததை போலீஸ் கண்டுப்பிடித்துள்ளதாக இன்று ஜோகூர் போலீஸ் தலைமையகத்தில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் குமார் தெரிவித்தார்.
அவர்கள் தாய்மார்களுக்கான மருத்துவக் கட்டணத்தை செலுத்தி, செல்லுபடியாகும் பிறப்புச் சான்றிதழைப் பெற தேசிய பதிவுத் துறைக்கு அழைத்துச் செல்வார்கள்.
பின்னர் குழந்தைகள் பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்யப்பட்டு, வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களைத் தயாரிக்கப் பயன்படுத்தி, Dark Web மற்றும் உலகம் முழுவதிலுமிருந்து சந்தாதாரர்களைக் கொண்ட ஒரு டெலிகிராம் குழுவில் பதிவேற்றுகின்றனர் .
ஜோகூர் பாருவில் 29 வயது தொழில்நுட்பாளர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஒரு மாத கால நடவடிக்கைக்குப் பிறகு அக்கும்பல் முறியடிக்கப்பட்டது.
சந்தேக நபரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட தொலைபேசியில் டஜன் கணக்கான குழந்தைகளின் பாலியல் துஷ்பிரயோக வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களைக் கண்டறியப்பட்ட தகவலையும் குமார் வெளியிட்டார்.