
சிலாங்கூர், அக்டோபர்- 8,
சிலாங்கூர் மாநிலத்தில் ‘Influenza’ நோய்த்தொற்றுகள் வெறும் ஒரு வாரத்தில் 80 சதவீதத்திற்கும் மேலாக அதிகரித்துள்ளன.
கல்வி கூடங்களில் அதிகம் பரவி வரும் இந்த நோய்த்தொற்று, புள்ளி விபரத்தின் அடிப்படையில், 64.7 சதவீதம் பாலர் பள்ளி முதல் உயர் கல்வி நிலையங்கள் வரை பரவியுள்ளதாக மாநில பொது சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் குழு உறுப்பினர் ஜமாலியா ஜமாலுடீன் (Jamaliah Jamaluddin) தெரிவித்தார்.
மார்ச் 8 முதல் செப்டம்பர் 27 வரை மாநிலம் முழுவதும் 88 இடங்களில் இந்த நோய்த்தொற்றுகள் கண்டறியப்பட்டுள்ளன.
சிலாங்கூர் சுகாதார துறை தற்போதைய நிலையை நெருக்கமாக கண்காணித்து, ஒவ்வொரு மாவட்ட சுகாதார அலுவலகத்தின் மூலம் அபாய மதிப்பீடுகளை நேரடியாக நடத்தி வருகிறது.
Influenza நோயால் காய்ச்சல், இருமல், தொண்டை வலி, உடல் வலி மற்றும் சோர்வு போன்ற அறிகுறிகள் ஏற்படக்கூடும் என்றும் மூத்த குடிமக்கள் மற்றும் நீண்டகால நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் அபாயமுள்ளது என்று அறியப்படுகின்றது.
இந்நிலையில், எந்த பள்ளிகளையும் தற்காலிகமாக மூடுவதற்கான பரிந்துரைகள் சுகாதார அலுவலகங்களிலிருந்து இதுவரை பெறப்படவில்லை எனவும் ஜமாலியா தெரிவித்தார்.
மாநில அரசு சுகாதார அதிகாரிகளுடன் இணைந்து பிப்ரவரி மாதம் முதல் மூத்த குடிமக்களுக்கு இலவச Influenza தடுப்பூசி திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
செப்டம்பர் 20ஆம் தேதி மற்றும் செப்டம்பர் 27ஆம் தேதியை ஒப்பிடும்போது Influenza நோய்த்தொற்று 602-லிருந்து 1,128 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.