
சிலாங்கூர், ஜூலை 7 – அண்மையில் சுகாதாரத்துறை மேற்கொண்ட ஆய்வில், சிலாங்கூரில் 36,428 இடைநிலைப் பள்ளி மாணவர்களில், மொத்தம் 1020 மாணவர்கள் மிகுந்த மன உளைச்சலில் இருப்பதற்கான ஆரம்ப அறிகுறிகளைக் கண்டறிந்துள்ளதாக பொது சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் குழுத் தலைவர் ஜமாலியா ஜமாலுதீன் தெரிவித்துள்ளார்.
2024 மற்றும் 2025 ஆம் ஆண்டின் பள்ளி அமர்விற்கான மனநல பரிசோதனை பகுப்பாய்வில் மாணவர்களிடையே ஒட்டுமொத்த உளவியல் நடத்தை கட்டுப்பாட்டில் இருப்பதையும் குறிக்கின்றது என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
மாணவர்களிடையே மேலோங்கி காணப்படும் இந்த மனநலக் கவலைகளை நிவர்த்தி செய்வதற்கு தகுந்த திட்டங்கள் ஆரம்ப பள்ளி முதலே தொடங்கப்பட்டுள்ளன.
பயிற்சி பெற்ற ஆலோசனை ஆசிரியர்கள், மனச்சோர்வு தளர்வு நுட்பங்கள், சுவாசப் பயிற்சிகள், உடல் செயல்பாடுகள் போன்ற மனநல உத்திகள் குறித்த பட்டறைகள் மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ளது.
இத்தகைய முயற்சிகள் யாவும் ஆரம்பகால தடுப்பு நடவடிக்கைகளாக செயல்படுகின்றன என்றும் முதன்மை நிலையிலிருந்து மாணவர்களின் மன நலனை வலுப்படுத்துவதை நோக்கமாகவும் கொண்டுள்ளன என்றும் ஜமாலியா விளக்கமளித்துள்ளார்.