
கோலாலம்பூர், ஆகஸ்ட் 14 – அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சிலாங்கூர் சுக்மா போட்டிகளில் இந்தியர்களின் பாரம்பரிய தற்காப்புக் கலையான சிலம்பம், பரிசீலனைக்குப் பிறகு மீண்டும் இணைக்கப்பட்டுள்ளது.
இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹன்னா யோ, சரவாக் இளைஞர், விளையாட்டு மற்றும் தொழில்முனைவர் மேம்பாட்டு அமைச்சர் டத்தோஸ்ரீ அப்துல் கரீம் ரஹ்மான் ஹம்சா, மலேசிய ஒலிம்பிக் கவுன்சில் (OCM) தலைவர் தான் ஸ்ரீ நோர்சா ஜகாரியா ஆகியோர் சிறப்பு கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் இம்முடிவை எடுத்துள்ளனர்.
சிலாங்கூர் சுக்மா ஏற்பாட்டுக் குழுவின் தலைவரும், மாநில இளைஞர், விளையாட்டு மற்றும் தொழில்முனைவர் நிர்வாகக் கவுன்சிலருமான நஜ்வான் ஹலிமி சிலம்பத்தை மீண்டும் இணைக்க வேண்டுமென்ற பரிந்துரையை முன்வைத்தார்.
சுக்மாவில் 30 கட்டாய விளையாட்டுகளும், ஏழு விருப்ப விளையாட்டுகளும் இடம்பெறுகின்ற நிலையில் இனி எந்த புதிய முன்மொழிவுகளோ அல்லது மேல்முறையீடுகளோ பரிசீலிக்கப்படமாட்டாது என்று குழு உறுதிப்படுத்தியுள்ளது.
மேலும் நிகழ்ச்சியில் இடம்பெறாத விளையாட்டுகளை “சுக்மா அல்லாத விளையாட்டுகள்” என்ற வகையில் தனியாக நடத்த ஆராய்ந்து வருவதாக ஹன்னா யோ கூறியுள்ளார்.
சிலாங்கூர் சுக்மா, 2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 முதல் 24 ஆம் தேதி வரை மாநிலத்தின் ஒன்பது மாவட்டங்களில் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.