
பாலிங், மார்ச் 14 – பாலிங்கில் (Baling) பூலாய் (Pulai), Jalan Kampug Payaவில் உள்ள ஒரு குடும்பத்தினர் நேற்று மாலை தங்களது வீட்டில் நான்கு மீட்டர் நீளம் கொண்ட ராஜ நாகம் இருந்ததைக் கண்டு பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர்.
மாலை மணி 6.40 அளவில் இது குறித்து தங்களுக்கு அவசர அழைப்பு கிடைத்ததாக மலேசிய சிவில் தற்காப்பு படையைச் சேர்ந்த அதிகாரி முகமட் பைசோல் அப்துல் அஜிஸ் ( Mohd Faizol Ab Aziz ) தெரிவித்தார்.
முதலில் அந்த பாம்பு வீட்டிற்கு பின்னால் உள்ள வேலிக் கம்பியில் சிக்கிக் கொண்டிருந்ததாகவும் பின்னர் பெரிய அளவில் சீறிக்கொண்டு அந்தவீட்டிற்கு வெளியே உள்ள பொருட்கள் வைக்கும் பகுதிக்குள் நுழைந்து மறைந்ததாக அந்த வீட்டின் உரிமையாளர் கூறியதாக முகமட் பைசோல் கூறினார்.
அதனைத் தொடர்ந்து அந்த வீட்டிற்கு சென்ற சிவில் தற்காப்பு படை உறுப்பினர்கள் சுமார் 25 நிமிடங்கள் தேடிய பின் 10 கிலோ எடையுள்ள அந்த ராஜ நாகத்தை பிடிக்கும் முயற்சியில் வெற்றி பெற்றனர்.
அந்த பாம்பு பொருட்களை வைக்கும் ரேக்குகளுக்கு இடையில் குறுகிய இடைவெளியில் மறைந்திருந்ததாக முகமட் பைசோல் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.
அந்த ராஜ நாகம் பின்னர் வனப்பகுதியில் விடப்பட்டது.