
வாஷிங்டன், ஏப்ரல்-9, அமெரிக்காவுக்கு சீனா ஏற்றுமதி செய்யும் அனைத்து பொருட்களுக்கும் தடாலடியாக 104 விழுக்காட்டு வரியை விதிக்க அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தயாராகி வருகிறார்.
அமெரிக்க நேரப்படி இன்று புதன்கிழமை அவ்வறிவிப்பு வெளியாகலாம் என வெள்ளை மாளிகைக் கூறியது.
அது நடந்தால், இந்த இடைப்பட்ட காலத்தில் சீனப் பொருட்களுக்கான வரி விகித உயர்வு 125 விழுக்காடாகப் பதிவாகும்.
கடந்த வாரம் சீனாவுக்கு மொத்தமாக 54 விழுக்காடு வரியை விதித்த டிரம்ப், எப்படியும் சீனா இறங்கி வந்து பேச்சுவார்த்தைக்கு உடன்படும் என எதிர்பார்த்தார்.
ஆனால், சீனாவோ ஒரு போதும் அமெரிக்காவிடம் மண்டியிட மாட்டோம் எனக் கூறி, பதிலடியாடாக 34% வரியை அறிவித்தது.
இதனால் மேலும் சினம் கொண்ட டிரம்ப் கூடுதலாக 50 விழுக்காடு வரியை அறிவித்தார்.
இதனால், ஆரம்பத்தில் விதிக்கப்பட்ட 10 % வரியையும் சேர்த்து மொத்தமாக 94% வரியை செலுத்த வேண்டிய சூழ்நிலைக்கு சீனா தள்ளப்பட்டது.
டிரம்பின் அவ்வறிவிப்புக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்த சீனாவின் வர்த்தகத் துறை அமைச்சர், அமெரிக்கா தவறுக்கு மேல் தவறு செய்வதாக குற்றம் சாட்டினார்.
எது எப்படி இருப்பினும், அமெரிக்காவின் மிரட்டலுக்கு அடிபணிய மாட்டோம்; அமெரிக்கப் பொருட்களுக்கு 34% வரி விதிப்பதிலிருந்து பின்வாங்க மாட்டோம் என்றார்.
சீனாவின் பிடிவாதத்தை எதிர்பார்க்காத டிரம்ப் இப்போது வரலாறு காணாத அளவுக்கு 104% வரிக்குத் தயாராகி வருவது உலக நாடுகளையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.