
கோலாலம்பூர், பிப் 7 – இன்று பத்துமலைக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மேற்கொண்ட வருகையின்போது அங்கு மேற்கொள்ளப்பட்டுவரும் மேம்பாட்டு நடவடிக்கைகளை அறிந்து அவர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தததாக கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத்தின் தலைவரான டான்ஸ்ரீ ஆர். நடராஜா தெரிவித்தார்.
பத்துமலை திருத்தலம் வந்தவுடன் அவருக்கு தேவஸ்தானத்தின் சார்பில் மாலை அணிவித்து பொன்னாடை அணிவிக்கப்பட்டு சிறந்த வரவேற்பு நல்கப்பட்டது. மேம்பாட்டு பணிகள் எல்லாம் விளக்கமாக தெரிவிக்கப்பட்டபோது பிரதமர் அதனை விரிவாக கேட்டுக் கொண்டார்.
அதோடு பத்துலையில் கட்டப்படவிருக்கும் பிரமாண்டமான பலநோக்கு மண்டபம் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டதோடு அந்த இடத்தையும் நேரடியாக பிரதமர் பார்வையிட்டார்.
சில மேம்பாட்டு திட்டங்களுக்கு அனுமதி கிடைக்க வேண்டும் என பிரதமரிடம் தெரிவித்தபோது இந்த திட்டங்களுக்கு உடனடியாக அனுமதி தர வேண்டும் என சிலாங்கூர் மந்திரிபுசாருக்கு அவர் உத்தரவிட்டார்.
இதனிடையே பத்துலைக்கு வருகை புரிந்து தேவஸ்தானத்தின் கோரிக்கையை பொறுமையாக செவிமடுத்த பிரதமருக்கு டான்ஸ்ரீ நடராஜா தனது நன்றியையும் தெரிவித்துக் கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் இலக்கிவியல் அமைச்சர் கோபிந்த் சிங், சிலாங்கூர் மந்திரிபுசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி, ம.இ.காவின் தேசிய தலைவர் டான்ஸ்ரீ S. A . விக்னேஸ்வரன், தொழில்முனைவர் மேம்பாடு மற்றும் கூட்டுறவுத்துறை துணையமைச்சர் டத்தோ ரமணன் ராம கிருஷ்ணன், ம.இ.காவின் தேசிய துணைத் தலைவர்
டத்தோஸ்ரீ எம். சரவணன், சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் பாப்பாராய்டு மற்றும் தேவஸ்தானத்தின் முக்கிய பொறுப்பாளர்களும் கலந்துகொண்டனர்.