சுங்கை பூலோ, அக்டோபர்-6, சுங்கை பூலோ நாடாளுமன்றத் தொகுதியில் வெள்ள அபாயத்தைக் குறைக்கும் நோக்கில், டாமான்சாரா ஆற்றின் வெள்ளத் தடுப்புப் பணிகளுக்காக 481 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
டெண்டர்கள் மூடப்பட்டு குத்தகையாளருக்கு ஒப்பந்தக் கடிதம் வழங்கப்பட்டு அத்திட்டம் தற்போது ஆரம்பக் கட்டத்திலிருப்பதாக, சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
திட்டம் இன்னும் தொடங்கவில்லையென்றாலும், 16 மில்லியன் ரிங்கிட் செலவில் சுபாங் ஆற்றில் பணிகள் தொடங்கியிருப்பதாக அவர் சொன்னார்.
சுங்கை பூலோ தொகுதி மக்களுக்கு இதுவரை எந்த பிரதமரும் இவ்வளவு பெரியத் திட்டத்தை அங்கீகரித்ததில்லை. எனவே டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கு தாம் நன்றிகூற கடமைப்பட்டுள்ளதாக டத்தோ ஸ்ரீ ரமணன் கூறினார்.
780 மில்லியன் ரிங்கிட் செலவில் சுங்கை பூலோவில் இன்னொரு வெள்ளத் தடுப்புத் திட்டத்தை மேற்கொள்ளவும் உத்தேசிக்கப்பட்டிருப்பதாக அவர் சொன்னார்.
சுங்கை பூலோ மட்டுமின்றி நாடு முழுவதும் வெள்ள அபாயத்தைக் குறைக்கும் பல்வேறு நடவடிக்கைகளை அரசாங்கம் கட்டங்கட்டமாக மேற்கொண்டு வருகிறது என்றார் அவர்.
தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டுத் துறை துணையமைச்சருமான டத்தோ ஸ்ரீ ரமணன், சுங்கை பூலோ நாடாளுமன்றத் தொகுதியில் மாணவர்களுக்கு கல்வி வெகுமதிகளை வழங்கும் விழாவில் பேசினார்.
அதில், பேங்க் ராக்யாட் அறக்கட்டளை ஏற்பாட்டில் பாயா ஜாராஸ் சுற்று வட்டார பள்ளிகளுக்கும் மாணவர்களுக்கும் கல்வி நிதியுதவிகள் வழங்கப்பட்டன.