
கோலாலம்பூர், மார்ச்-8 – பெர்மிட் இல்லாமல் பட்டாசுகள் வாணவெடிகள் மற்றும் சுங்க வரி செலுத்தாத சிகரெட்டுகளை கிடங்கில் சேமித்து வைத்திருந்த கும்பல் முறியடிக்கப்பட்டுள்ளது.
அவற்றின் மொத்த மதிப்பு 45 மில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமாகும்.
கிள்ளான், காப்பாரிலும் ரவாங், புக்கிட் செந்தோசாவிலும் மேற்கொள்ளப்பட்ட Op Taring சோதனை நடவடிக்கையில் அவை கைப்பற்றப்பட்டன.
காப்பாரில் ஒரு பெரியக் கிடங்கிலிருந்து கைப்பற்றப்பட்ட பல்வேறு வகையான பட்டாசு மற்றும் வாணவெடிகளின் மதிப்பு மட்டுமே 32.2 மில்லியன் ரிங்கிட் என, புக்கிட் அமானின் உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் பொது அமைதிப் பிரிவு கூறியது.
ஒரு பெரிய சரக்கு கொள்கலன் மற்றும் 3 டன் லாரியொன்றும் பறிமுதல் செய்யப்பட்டன.
அங்கிடங்கின் பொறுப்பாளர் என நம்படும் 33 வயது ஆடவர், 1957-ஆம் வெடிப்பொருட்கள் சட்டத்தின் கீழ் கைதானார்.
புக்கிட் செந்தோசாவில் நடைபெற்ற சோதனையில், சுங்க வரி செலுத்தாமல் கடத்திக் கொண்டு வரப்பட்ட சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன; அவற்றின் மதிப்பு 1.2 மில்லியன் ரிங்கிட்டாகும்.
அங்கு 46 வயது ஆடவர் கைதானார்.
அவர் 1967-ஆம் ஆண்டு சுங்கத் துறை சட்டத்தின் கீழ் விசாரிக்கப்படுவார்.