சுங்கை பட்டாணி கைப்பேசி கடையில் திருட்டுச் சம்பவம்; 3 சந்தேக நபர்களுக்கு வலைவீசும் போலீஸ்

சுங்கை பட்டாணி, ஜனவரி 5 – சுங்கை பட்டானி Cendana Industrial பகுதிக்கு அருகேயுள்ள கைப்பேசி கடையொன்றில் நடந்த திருட்டு சம்பவம் தொடர்பில், போலீசார் மூவரைத் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்த சம்பவத்தில், கைப்பேசிகள் மற்றும் பணம் ஆகியகளைச் சேர்த்து 20,000 ரிங்கிட்டுக்கும் மேல் நஷ்டம் ஏற்பட்டதாக கணக்கிடப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து நடந்து வருவதோடு, திருட்டின் போது அச்சந்தேக நபர்கள் மூவரும் முகமூடியை அணிந்திருந்தனர் என்றும் குவாலா மூடா காவல் துறைத் தலைவர் Assistant Commissioner Hanyan Ramlan தெரிவித்துள்ளார். மேலும் இந்த வழக்கு குற்றவியல் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சந்தேக நபர்கள் கடைக்குள் புகுந்து, அங்கு பணிபுரிந்துக் கொண்டிருந்த காவலரை பராங் கத்தியைக் கொண்டு மிரட்டி, அவரது தொலைபேசியையும் திருடியுள்ளனர். அதேபோல், iPhone மற்றும் Android மாடல்கள் உள்ளிட்ட 20,000 ரிங்கிட் மதிப்பிலான கைப்பேசிகளையும் திருடியதாக கடை உரிமையாளர் கூறியுள்ளார்.
மேலும் பொதுமக்கள் குறைந்த விலையில் புதிய கைப்பேசிகள் விற்பனை செய்யப்படுவதைக் கவனிக்க வேண்டும் என்றும் அவைகள் நிச்சயம் திருட்டு கைபேசிகளாக இருக்கலாம் என்றும் அக்கடையின் உரிமையாளர் எச்சரித்துள்ளார்.
இந்நிலையில் போலீசார், சம்பந்தப்பட்ட சந்தேக நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.



