
புத்ராஜெயா, பிப்ரவரி-13 – சர்ச்சைக்குரிய சொஸ்மா சட்டத்தின் கீழ் சுங்கை பூலோ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்ட கைதி ஒருவர் தாக்கப்பட்டதாகக் கூறப்படுவதை, உள்துறை அமைச்சர் மறுத்துள்ளார்.
அக்கைதியின் மனைவி செய்த போலீஸ் புகாரை விசாரிக்க, சிறைச்சாலை துறையின் தலைமை இயக்குநருக்கு உடனடி உத்தரவுப் பிறப்பிக்கப்பட்டது.
விசாரணை அறிக்கை முழுமைப் பெற்றுள்ள நிலையில், அக்குற்றச்சாட்டில் உண்மையில்லை என கண்டறியப்பட்டதாக, டத்தோ ஸ்ரீ சைஃபுடின் நாசூத்தியோன் இஸ்மாயில் கூறினார்.
தாக்கப்பட்டதால் தனது கணவர் மோசமான நிலையில் சுங்கை பூலோ மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டதாக புகார்தாரர் கூறியிருக்கிறார்.
ஆனால், அந்நபர் உண்மையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியுள்ளார்; இதனாலேயே உடல் பலவீனமடைந்து, சக்கர நாற்காலியில் வைத்து மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
என்றாலும் அம்மாதுவின் போலீஸ் புகார் நிச்சயம் விரிவாக விசாரிக்கப்படுமென சைஃபுடின் உறுதியளித்தார்.
இவ்வேளையில், ஆட்சேபம் தெரிவிக்கும் வகையில் அத்தடுப்புக் காவல் கைதியின் குடும்ப உறுப்பினர்கள் மேற்கொண்ட உண்ணாவிரதப் போராட்டம் மீது நடவடிக்கை ஏதும் எடுப்பதில்லை என போலீஸ் முடிவுச் செய்துள்ளதாகவும் அமைச்சர் சொன்னார்.
முன்னதாக பிப்ரவரி 9-ஆம் தேதி சுங்கை பூலோ சிறைச்சாலை வளாகத்துக்கு வெளியே அக்குடும்ப உறுப்பினர்கள் உண்ணாநோன்பு நடத்தினர்.
சொஸ்மா சட்டம் இரத்துச் செய்யப்பட வேண்டும் என்பதோடு, உள்ளே கைதிகளைச் சென்று காண அனுமதிக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.